ஆளும் திமுக அரசு அதிகாரப் பலத்தைப் பயன்படுத்தி  தமிழகம் முழுவதும் தேர்தல் விதி மீறல்களில் ஈடுபட்டது அனைவரும் அறிந்ததே. இந்தத் தேர்தல் முடிவுகள் அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான்.   

தேர்தலில் வெற்றி என்பது நிரந்தரம் இல்லை. நிச்சயமாக அனைத்துக்கும் ஒரு முடிவும், ஒரு தீர்வும், ஒரு மாற்றமும் கட்டாயம் உண்டு என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. இத்தேர்தலில் பாஜக, பாமக, தேமுதிக, மநீம, அமமுக ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிட்டன. ஆனால், இக்கட்சிகளால் பெரிய அளவில் தேர்தலில் சோபிக்க முடியவில்லை. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தேமுதிக வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணியின்றி, அதிகார பலம், ஆட்சி பலம், பண பலமின்றி, தைரியமாக தேர்தலில் களம் கண்ட தேமுதிக வேட்பாளர்களை பாராட்டுகிறேன்.

இந்தத் தேர்லில், திமுகவை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் கூட்டணியின்றி, தனித்தனியாக போட்டியிட்டதால், வாக்குகள் அதிகளவில் பிரிவதற்கு காரணமாக அமைந்தது. மேலும் ஆளும் திமுக அரசு அதிகாரப் பலத்தைப் பயன்படுத்தி தமிழகம் முழுவதும் தேர்தல் விதி மீறல்களில் ஈடுபட்டது அனைவரும் அறிந்ததே. இந்தத் தேர்தல் முடிவுகள் அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். ஜனநாயக ரீதியில் நியாயமாக தேர்தல் நடைபெற்றிருந்தால் அனைவருக்கும் வெற்றி கிடைத்திருக்கும். 

தேர்தலில் வெற்றி என்பது நிரந்தரம் இல்லை. நிச்சயமாக அனைத்துக்கும் ஒரு முடிவும், ஒரு தீர்வும், ஒரு மாற்றமும் கட்டாயம் உண்டு. எனவே வெற்றி தோல்வியை சமமாக எடுத்துக் கொண்டு, நாம் அடுத்த கட்டத்துக்குப் பயணிப்போம். தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதுடன், தோல்வியுற்றவர்கள் எதற்கும் கலங்க வேண்டாம், துவண்டு விட வேண்டாம். நமக்கு என்று ஒர் எதிர்காலம் கட்டாயமாக இருக்கிறது என்ற நம்பிக்கையோடு நாம் பயணிப்போம். இந்தத் தேர்தலை பொறுத்தவரை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாக ஏற்கிறேன்.” என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.