சென்னை மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.பிரியாவுக்கு வாழ்த்துகள். 28 வயதான பட்டியல் இனத்தை சேர்ந்த இளம் பட்டதாரியை மேயாராக்கிய முதல்வருக்கு நன்றி. சென்னையின் மேயர் நான் குடியிருக்கும் சட்டமன்ற தொகுதியில் இருந்து வந்தது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. 

சென்னை மாநகராட்சி மாமன்ற மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று 9.30 மணிக்கு மாமன்ற கூட்டம் தொடங்கியது. அப்பொழுது மேயர் பதவிக்கான வேட்புமனு வாங்கப்பட்டது, 

திமுக மேயர் வேட்பாளர பிரியா ராஜனை தவிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவித்தார். இன்றைய தினம் நடைபெற்ற கூட்டத் தொடரில் திமுக உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சியினுடைய மாமன்ற உறுப்பினர்கள், விசிக, மதிமுக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளுடைய மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தொடருக்கு வருகை தந்திருந்தனர். அதிமுகவை சேர்ந்த சென்னை மாமன்ற உறுப்பினர்கள் 15 பேர் இன்றைய கூட்டத்தொடருக்கு வரவில்லை.

சென்னை மாநகராட்சியின் முதல் பட்டியலின பெண் மேயராகவும் மிகக்குறைந்த வயதில் பொறுப்பேற்கும் பெண் மேயராக பிரியா ராஜன் பொறுப்பேற்றார். இந்த பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியம் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட சென்னை பெருநகர மாநகராட்சியின் மேயர் பிரியா ராஜனுக்கு அமைச்சர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பொன்னாடை போர்த்தியும் பூங்கொத்து கொடுத்தும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர் இதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சி மேயர் என்ற அரசு சின்னம் பொருந்திய காரில் ஏறி சென்றார். 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் 102 பெண்கள் சென்னை மாமமன்ற உறுப்பினர்கள் இருப்பது மகிழ்ச்சி. 50% இடஒதுக்கீடு மூலம் அதிகளவில் மகளிர் மாமன்ற உறுப்பினர்களாக பதவியேற்று இருக்கின்றனர். சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பு ஏற்று இருக்கும் பிரியா அவர்களுக்கு வாழ்த்துகள். இன்றைய முதலமைச்சர் சென்னை மாநகராட்சி மேயராக இருந்த போது உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் மேம்பாலங்கள் கட்டினார். இதற்காக பல விருதுகளை முதல்வர் ஸ்டாலின், மேயராக இருந்த போது பெற்றார். 46வது மேயராக பொறுப்பு ஏற்று இருக்கும் பிரியா, முதல்வரின் வழியில் இந்தியாவுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில் சென்னை மாநகராட்சியை மாற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.பிரியாவுக்கு வாழ்த்துகள். 28 வயதான பட்டியல் இனத்தை சேர்ந்த இளம் பட்டதாரியை மேயாராக்கிய முதல்வருக்கு நன்றி. சென்னையின் மேயர் நான் குடியிருக்கும் சட்டமன்ற தொகுதியில் இருந்து வந்தது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இன்றைய தமிழக முதல்வர், மேயராக இருந்த போது சென்னையை சிங்கார சென்னையாக மாற்றி பல திட்டங்களை கொண்டு வந்தார். அவரை பின்பற்றி, புதிதாக பொறுப்பேற்று இருக்கும் பிரியா சிறப்பாக செயல்படுவார். இளம் மேயராக இருந்தாலும், அவரின் செயல்பாடுகளில் சீனியர்களின் தலையீடு இருக்காது. முதலமைச்சரின் வழிகாட்டுதலில் அடிப்படையில் மேயர் இயங்குவார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏதாவது ஊழல் கடந்த ஆட்சியில் நடைபெற்று இருந்தால் அது குறித்து விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.