தேமுதிகவுக்கு வாக்கு சதவீதம் குறைந்து விட்டாலும் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளதை கருத்தில் கொண்டு அதிமுக- திமுக தலைவர்கள் விஜயகாந்தை இழுக்க காய் நகர்த்தி வருகின்றனர். 

இந்த நிலையில் தேமுதிக எந்த அணியில் சேரும் என்கிற குழப்பம் நிலவி வந்தது. இதுகுறித்து திமுக தரப்பில் விசாரித்தால், “திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு பேச்சு வார்த்தைகள் முடிந்து விட்டன. 40 தொகுதிகளிலும் எந்தெந்த கட்சிகள் எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதை தீர்மானித்து விட்டோம். ஆகையால் திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற வாய்ப்பே இல்லை’’ எனக் கூறுகின்றனர். 

தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், “திமுக கூட்டணியில் சேரும் விருப்பம் இல்லை. தினகரன் அணிக்கும் செல்ல வாய்ப்பில்லை. விரைவில் கூட்டணி முடிவை அறிவிப்போம்” எனக் கூறுகின்றனர். இந்நிலையில் தேமுதிகவுடன், அதிமுக நிர்வாகிகள் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக - தேமுதிக இடையே தொகுதிகளின் எண்ணிக்கையில் மட்டுமல்ல. எந்தெந்த தொகுதிகள் என்பதிலும் இழுபறி நீடிக்கிறது. அதிமுக கூட்டணியில் இணையும் பட்சத்தில் தாங்கள் விரும்பும் தொகுதிகளை கொடுத்தே ஆக வேண்டும் என தேமுதிக பிடிவாதமாக உள்ளது. ஆகவே கூட்டணியை முடிவு செய்வதில் இன்னும் ஓரிரு நாட்கள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது.