"முரசொலி நில விவகாரத்தில் ஸ்டாலின் சவால் விட்டதெல்லாம் வெற்றுச் சவடால் தானா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட் செய்து ஸ்டாலினை சீண்டி இருந்ததை தொடர்ந்து இந்த விவகாரம் இப்போது தமிழகத்தில் விவாதப்பொருளாகி இருக்கிறது. 

முரசொலி அமைந்திருக்கும் நிலம் பஞ்சமி நிலமென்று ராமதாஸ் குற்றம்சாட்டி இருந்தார். இந்த குற்றச்சாட்டை மறுத்த மு.க.ஸ்டாலின் சில அரசு ஆவணங்களை வெளியிட்டார். இதை தொடர்ந்து இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்த முரசொலி அலுவலகம் இருக்கும் இடத்தை மீட்டு உரியவர்களிடம் வழங்கவேண்டுமென பாஜக சார்பில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், “இந்த இடம் அஞ்சுகம் பதிப்பகத்துக்குச் சொந்தமானது. அந்த நிலத்தில் தான் முரசொலி அறக்கட்டளை வாடகைக்குதான் இயங்கி வருகிறது. அந்த நிலத்தை முறையாக நில உரிமையாளர்களிடமிருந்து அஞ்சுகம் பதிப்பகம் வாங்கியுள்ளது. அஞ்சுகம் பதிப்பகம் பெயருக்கு பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.

இதை விமர்சிக்கும் விதத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் தனது கருத்தை பதிவு செய்திருந்தார். அதில், முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்குகிறதாமே... அப்படியானால், அந்த பட்டா வெளியிட்டது, அரசியலில் இருந்து விலகத் தயாரா? என்று சவால் விட்டதெல்லாம் வழக்கம் போல் வெற்றுச் சவடால் தானா?

அரசியல் உலகில் எவ்வளவோ பல்டிகள் அடிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை அனைத்திலும் ஆகச்சிறந்த பல்டி... முரசொலி நிலம் மீதான பழியைத் துடைப்போம் என்று வீர வசனம் பேசி விட்டு, இப்போது நாங்களே வாடகைக்கு தான் இருக்கிறோம் என்று சரண் அடைந்தது தான்? முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் தான் இயங்குகிறது என்பதாவது உண்மையா? மூலப் பத்திரத்தைத் தான் வெளியிடவில்லை. குறைந்தபட்சம் வாடகை ஒப்பந்தத்தையாவது முரசொலி நிர்வாகம் வெளியிடுமா? கூடவே சவால் விட்டவர் அரசியலில் இருந்து விலகுவாரா? எனக் கேட்டிருந்தார். 

இந்நிலையில், ட்விட்டரில் #முரசொலி_பல்டி என்னும் ஹேஷ்டேக்கை உருவாக்கி முதலிடத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.  மூல பத்திரம் இல்லன்னு ஆகி போச்சு, சரி வாடகை கட்டின ரசீது எங்க? எனக் கேட்டு வருகின்றனர்.