தயாநிதிமாறனுக்கு மக்களவை தேர்தலில் சீட் ஒதுக்கக்கூடாது என நெல்லை, தூத்துக்குடி மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

திமுக சார்பில் மத்திய சென்னை தொகுதி தயாநிதி மாறனுக்கு ஒதுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. தயாநிதிமாறனால் இந்திய அளவில் கவனம் ஈர்த்த தொகுதி மத்திய சென்னை. இந்த தொகுதியில் மீண்டும் திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக தலைவர் ஸ்டாலினின் உறவினருமான தயாநிதி மாறன் போட்டியிடப் போகிறார். இதனால் இப்போதே திமுக நிர்வாகிகள் தொகுதியில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். இரண்டு முறை தொடர்ந்து இந்த தொகுதியில் இருந்து நாடாளுமன்றம் சென்ற தயாநிதிமாறன் கடந்த 2014 ம் ஆண்டு தொடர்ந்து மூன்றாவது வெற்றியை பெற்று ஹாட்ரிக் அடிக்கலாம் எனக் கருதப்படுகிறது. 

இந்நிலையில், தயாநிதிமாறனும் அவரது சகோதரர் கலாநிதி மாறனும் நடத்தி வரும் சன் நெட்வொர்க், கல் பப்ளிகேஷன் நிறுவனங்களில் வேலை செய்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைக் கண்டிக்கும் வகையில் வரும் மக்களவைத் தேர்தலில் தயாநிதிமாறனுக்கு தொகுதி ஒதுக்கக் கூடாது என வலியுறுத்தி திமுக தலைவர் திரு மு.க. ஸ்டாலினுக்கு நெல்லை, தூத்துக்குடி மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

 

கல் பப்ளிகேஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் இயக்குநர்களாக கலாநிதி மாறன், காவேரி கலாநிதி, ஆர்.எம்.ஆர்.ரமேஷ் ஆகியோர் இருந்து வருகின்றனர். சன் நெட்வொர்க் இயக்குநர்களாக கலாநிதிமாறன் காவேரி கலாநிதி ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் இந்த கோரிக்கை மனுவை மு.க.ஸ்டாலின் கிடப்பில் போடுவாரா? செவி சாய்ப்பாரா என்பது விரைவில் தெரியவரும்.