திமுகவுடன் கூட்டணி சேர எடுத்த முயற்சிகள் வீணாகப் போனதால், அதிமுகடன் கூட்டணிக்கு பாமக தள்ளப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த காலங்களில் திமுக கூட்டணில் பாமகதான் முதலில் இடம் பிடிக்கும். பாமகவை கூட்டணியில் வைத்துகொள்ள கருணாநிதி எப்போதுமே ஆர்வம் காட்டுவார். வட மாவட்டங்களில் செல்வாக்கு உள்ள பாமகவை வைத்து வெற்றியை அறுவடை செய்ய கருணாநிதி திட்டமிடுவார். இதனால், கூட்டணியில் முதல் மாலை பாமகவுக்கு சாற்றப்படும். ஆனால், இந்த முறை மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிட பாமக டிசம்பர் இறுதியில் அறிவிப்பு வெளியிட்ட பிறகு, தொடக்கம் முதலே அக்கட்சியுடன் கூட்டணி சேர திமுக ஆர்வம் காட்டவில்லை. 

ஆனால், பாமக தரப்பில் அக்கட்சி இரண்டாம் கட்ட தலைவர்கள் திமுக கூட்டணியை விரும்பியிருக்கிறார்கள். குறிப்பாக அன்புமணி ராமதாஸ் திமுகவுடனான கூட்டணியை விரும்பினார். இதனால், ஸ்டாலின் மருமகன் சபரீசன் மற்றும் திமுகவின் முன்னணி  தலைவர்கள் மூலமாக திமுக கூட்டணியில் சேர பாமக முயற்சி செய்தது. இதேபோல வட மாவட்ட திமுக தலைவர்களும் கூட்டணிக்குள் பாமகவை கொண்டு வர ஆர்வம் காட்டிவந்தார்கள்.

 

 தொடக்கம் முதலே பாமக கூட்டணியை விரும்பாத ஸ்டாலின், எதிர்ப்பு ஓட்டுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக கடைசியில் பாமகவுடன் கூட்டணி வைக்க ஒத்துக்கொண்டார். திமுக கூட்டணியில் பாமகவைச் சேர்க்க விசிக எதிர்ப்பு தெரிவித்தபோதும், அக்கட்சியைச் சமாதானப்படுத்த திமுக தலைமை முயற்சித்து. “பாமகவும் விசிகவும் திமுக கூட்டணியில் இடம்பெறும். 2011-ஆம் ஆண்டில் இரு கட்சிகளும் திமுக கூட்டணியில் இடம்பிடித்திருந்தன.” என்று திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவில் இடம் பிடித்திருக்கும் பொன்முடி தெரிவித்தது இதை மனதில் வைத்துதான். 

திமுக தரப்பில் பாமகவுடன் 5+1 என்ற அளவில் தொகுதி பங்கீடு தொடர்பாகப் பேசப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தேர்தல் செலவு தொடர்பாக பாமகவுக்கு  திமுக தரப்பில் எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. இந்த விஷயத்தில் திமுக உத்தரவாதம் அளித்தால் கூட்டணியைப் பேசி முடிக்க பாமக உத்தேசிக்கப்பட்டிருந்தது. திமுகவின் முடிவை அறிய நேற்று முன்தினம் வரை பாமக காத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதை திமுக ஏற்றுக்கொள்ளாததால், அதிமுகவுக்கு செல்ல பாமக முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

ஆனால், பாமகவை கடைசி நேரத்தில் திமுக உதறிதள்ள இதுமட்டுமே காரணமல்ல. தொடக்கம் முதலே பாமகவுடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டாத ஸ்டாலின், கட்சி நிர்வாகிகளிடம் பாமக இல்லாமலேயே வட மாவட்டங்களில் திமுக வெற்றி பெறும் என்று  நம்பிக்கையூட்டியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது வட மாவட்டங்களில் திமுக கணிசமாக வெற்றி பெற்றது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் மட்டுமே இருந்த நிலையில், இதர சிறு கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு வட மாவட்டங்களில் திமுக வெற்றி பெற்றது. இந்த நம்பிக்கையால், பாமகவை கடைசி நேரத்தில் ஸ்டாலின் கைவிட்டார் என்கிறார்கள் திமுகவினர். அதிமுக - பாமக கூட்டணி ஏற்பட்டால், தினகரனின் ஓட்டுப் பிரிப்பு தங்களுக்கு சாதகமாகும் என்றும் திமுக எதிர்பார்க்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில் தற்போதைய கூட்டணியே போதும் என்ற முடிவுக்கு ஸ்டாலின் வந்தார் என்று அக்கட்சி வட்டாரங்களில் தெரிவிக்கின்றன.