குடலிறக்க நோயினால் அவதிப்பட்டு அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வெடுத்து வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓய்வில்லாமல், சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, தேர்தல் முடிந்த பிறகு, வீட்டில் இருந்தவாறு கட்சிப் பணிகளையும், தேர்தல் தொடர்பான விவகாரங்கள் பற்றியும் தொலைபேசியின் மூலமே கவனித்து வந்தார். ஒன்றரை மாதங்களுக்கு பிறகு, சட்டப்பேரவைக்கு சென்ற அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரவுநேர ஊரடங்கு உள்ளிட்டவற்றை அறிவித்தார்.

இதனிடையே, கடந்த 19ம் தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடலிறக்க நோய்க்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பின்னர், ஒருநாள் மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பிற்கு பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து, மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சென்னையில் உள்ள அவரது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, ஓ.பி.எஸ், ‘அண்ணே இப்படொயொரு நிலைமை வரும்னு எதிர்பார்க்கலண்ணே... சீக்கிரம் சரியாகிடும்’’ என தெரிவித்துள்ளார். அவருடன் சில கட்சி நிர்வாகிகளும் சென்றதாக கூறப்படுகிறது.