முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் மூன்றாண்டு சட்டப்படிப்பில் சேர்ந்ததில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக துணை வேந்தராக வணங்காமுடி இருந்த காலத்தில், வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டில், மாணவர்கள் சேர்க்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டிற்கு தேவையான எந்த சான்றிதழும்
இல்லாமல், விவேக் ஜெயராமன் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆனால், அவருடைய விண்ணப்பத்துடன் வெளிநாட்டு வாழ் இந்தியர் என்பதற்கு அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் சான்றிதழ் இணைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வாழ்பவர் என்பதற்கான வங்கி கணக்கு புத்தகம், விண்ணப்பதாரருக்கும் - வெளிநாட்டு வாழ் இந்தியருக்குமான உறவை
உறுதிபடுத்தும் சான்றிதழ், தகுதி சான்றிதழ் போன்றவை வழங்கப்படவில்லை என முன்னாள் துணை வேந்தர் வணங்காமுடிக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், முதல் தகவல் அறிட்ககையில் விவேக் ஜெயராமன் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக, அமைச்சர் ஜெயக்குமார், சட்ட பல்கலைக்கழகத்தில் விவேக் ஜெயராமன் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து, என்.ஆர்.ஐ. கோட்டா மூலம் மூன்று ஆண்டுகள் கொண்ட எல்.எல்.பி. படிப்பில் சேர்க்கை பெற்றிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் குடும்பமே ஒரு மோசடிக் குடும்பம். அரசாங்கத்தை ஏமாற்றுபவர்கள் கண்டிப்பாக சிறையில் அடைக்கப்படுவர் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுக்கு விவேக் ஜெயராமன் விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், அமைச்சர் ஜெயக்குமாருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஆட்சியும் அதிகாரமும் இருப்பதால் யாரையும் எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என நினைக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.

இதுபோன்ற மிரட்டல்களுக்கு ஒருபோதும் பயப்படுகிற ஆல் அல்ல நான். எத்தகைய மிரட்டல்களையும் சட்டப்பூர்வமாக சந்திக்கத் தயாராக இருக்கிறேன் என்றும் தனது பெயரைச் சொல்லி குடும்பம் அவதூறுக்கு ஆளாகும் நிலையை இனி எவர் ஏற்படுத்தினாலும், அதற்கான சட்ட விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் விவேக் ஜெயராமன் கூறியுள்ளார்.