நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பா.ஜ.க.வுடன் எந்த சவகாசமும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று ரஜினியை தமிழருவி மணியன் கேட்டுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.   டார்ஜிலிங்கில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ரஜினி சென்னை திரும்பிய உடன் இரண்டு பேரை அழைத்தார். ஒருவர் தனது நண்பர் தமிழருவி மணியன். மற்றொருவர் ரஜினி மக்கள் மன்றத்தின் அவைத்தலைவர் இளவரசன். இவர்களில் தமிழருவி மணியனை காலை எட்டு மணிக்கெல்லாம் தனது வீட்டுக்கு வரவழைத்து பேசியுள்ளார் ரஜினி. அப்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் எப்படி இருக்கும் என்று ரஜினி தமிழருவியிடம் கேட்டுள்ளார்.அதற்கு தற்போதைய சூழலில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது என்பது நல்ல முடிவு. ஆனால் வலுவான கூட்டணியுடன் களம் இறங்கினால் வெற்றி உறுதி என்று ரஜினிக்கு தமிழருவி ஆலோசனை சொன்னதாக கூறப்படுகிறது. அப்படி என்றால் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கலாம் என்கிறீர்களா? என்று ரஜினி கேட்டதாகவும் இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த தமிழருவி இல்லை இல்லை, பா.ஜ.க. சவகாசம் தற்போதைக்கு வேண்டாம் என்று பதற்றம் அடைந்து பதில் சொன்னதாகவும் சொல்லப்படுகிறது. அப்படி என்றால் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்று ரஜினி கேட்ட போது, நீங்க முதலில் கட்சி ஆரம்பியுங்கள், கூட்டணிக்கு உங்களை தேடி வருவார்கள் என்று மட்டும் தமிழருவி சொன்னதாக கூறப்படுகிறது. இதனை கேட்டுக் கொண்ட ரஜினி, சரி விரைவில் நல்ல சேதி சொல்வதாக தமிழருவியை அனுப்பி வைத்துள்ளார். அடுத்ததாக தன்னை சந்திக்க வந்த மக்கள் மன்றத்தில் அவைத் தலைவர் இளவரசனிடம், நிர்வாகிகள் நியமனம், மன்ற உறுப்பினர் சேர்க்கை குறித்து கேட்டுள்ளார். அதற்கு இளவரசன் அளித்த பதில்களை குறித்து வைத்துக் கொண்ட ரஜினி, மக்கள் மன்றத்தின் உயர்மட்ட நிர்வாகிகளை அழைத்து இளவரசன் கூறியது சரிதானா என்று கிராஸ் செக் செய்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. சென்னைக்கு வந்த வேகத்தில் ரஜினி அரசியல் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுவது விரைவில் அவர் கட்சிப் பெயரை அறிவிப்பதற்கான அறிகுறி என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் கிசுகிசுக்கிறார்கள்.