பா.ம.க இருக்கும் கூட்டணியில் இருப்பதற்கு நாம் தேர்தலில் போட்டியிடாமலேயே கூட போய்விடலாம் என்கிற ரீதியில் சுதீஷிடம் பிரேமலதா கறாராக கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தி.மு.க கூட்டணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பது தான் சுதீஷின் நீண்ட நாள் கனவு. அதனை மனதில் வைத்து தான் முதலில் கனிமொழி மூலமாகவும் பிறகு எ.வ.வேலு மூலமாகவும் பேச்சுவார்த்தை நடத்தினார் சுதீஷ். ஆனால் தி.மு.க தரப்பில் இருந்து பெரிய அளவில் உறுதி மொழிகள் வராத நிலையில் பா.ஜ.க சுதீஷை அணுகியுள்ளது. இதனால் அவர்களுடன் பேச்சுவார்த்தையை சுதீஷ் ஆரம்பிக்க, தி.மு.க தங்கள் முயற்சியை கைவிட்டுள்ளது. 

இந்த நிலையில் பா.ம.க அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்ததை சுதீஷ் மட்டும் அல்ல பிரேமலதாவையும் எரிச்சலாக்கியுள்ளது. கடந்த தேர்தலில் பா.மக. வேட்பாளர்களுக்கு தே.மு.தி.கவினர் கடுமையாக உழைத்தனர். ஆனால் பா.ம.கவினர் யாரும் தே.மு.தி.க வேட்பாளர்களை கண்டுகொள்ளவில். இதனால் வடமாவட்டங்களில் பா.ம.க கணிசமான அளவில் வாக்குகளை பெற்றது. ஆனால் தே.மு.தி.க வேட்பாளர்கள் படு தோல்வி அடைந்தனர்.

  

அப்போது முதலே பா.ம.க மீது விஜயகாந்துக்கும், பிரேமலதாவுக்கும் கடும் எரிச்சல். இந்த நிலையில் அ.தி.மு.க கூட்டணியில் ஏழு தொகுதிகளை பெற்றுள்ள பா.ம.கவுக்கு நிகரான தொகுதிகள் கிடைத்தால் கூட்டணி குறித்து பேச சுதீஷ் தயாராக இருந்தார். இந்த நிலையில் தான் காங்கிரஸ் தரப்பில் இருந்து விஜயகாந்தை அணுகியுள்ளனர். தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியை பலப்படுத்துவதுடன் இமேஜை மாற்ற விஜயகாந்த் சரியாக இருக்கும் என்று ராகுல் காந்தி நம்புகிறார். 

கமல் கூட்டணிக்கு வேண்டாம் என்று ஸ்டாலின் சொல்லிவிட்டதால் விஜயகாந்தை உள்ளே அழைத்து வர ராகுல் திட்டமிட்டு திருநாவுக்கரசர் மூலமாக காய் நகர்த்தியாக சொல்கிறார்கள். கூட்டணிக்கு தயார் என்று தே.மு.தி.க திருநாவுக்கரசரிடம் கூறியுள்ளது. இதனால் எத்தனை தொகுதிகள் வரை தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.கவிற்கு ஒதுக்க வாய்ப்பு உள்ளது என்கிற ரீதியில் தற்போது பேச்சு நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் தான் பா.ம.க இருக்கும் இடத்திற்கு நாம் செல்வதை விட அவர்களுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்துவது தான் சரியாக இருக்கும் என்று பிரேமலதா கூறி வருகிறாராம். எனவே ஒன்று இரண்டு சீட்டுகளுக்காக தி.மு.க கூட்டணியை இந்த முறை தே.மு.தி.க நழுவ விடாது என்கிறார்கள்.