Do blackout the name of the jail for the party
கருணாநிதியின் சட்டசபை வைரவிழா நிகழ்வை தேசிய அரசியலில் தங்களுக்கான திருப்புமுனையாகவே ஸ்டாலின் கருதுகிறார். இதை அவரே தன் வாயால் ஒப்புக்கொண்டும் விட்டார். இப்பேர்ப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த விழாவில் கனிமொழியின் பெயரை இருட்டடிப்பு செய்திருப்பதாக ராஜாத்தியம்மாளும், கனியின் ஆதரவு கூட்டமும் வெடித்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி கிடுகிடுக்கிறது அறிவாலயம்.
மாநில இயக்கமான தி.மு.க.வுக்கு டெல்லியில் பல வகைகளில் லாபி செய்வதற்காக கருணாநிதி வைத்திருந்த நபர்தான் முரசொலி மாறன். ‘கருணாநிதியின் மனசாட்சி’ என்று புகழப்பெற்ற மாறன் கலைஞர் நினைக்கு விஷயத்தை டெல்லியில் நடத்தி முடிப்பவராக இருந்தார். ஆனால் அவரது மறைவிற்குப்பின்னர் தி.மு.க.வுக்கான டெல்லி லாபி காலியாகவே இருந்தது.
டி.ஆர்.பாலு, திருச்சி சிவா போன்றோர்கள் தி.மு.க.வின் பிரதிதிகளாக மட்டுமே இயங்கினார்களே தவிர மாறன் போல் லாபிஸ்டுகளாக தங்களை கூர் தீட்டிக் கொள்ளவுமில்லை, அந்த திறனும் அவர்களுக்கில்லை என கருணாநிதியே வருத்தப்பட்டார்.

கனியை டெல்லிக்கு அனுப்புவதன் மூலம் ஸ்டாலினையும் நிம்மதியாக இயங்கவிட்டாற்போல் ஆச்சு என்பதில் கருணாநிதிக்கு தனது இந்த மூவ் மிக சரியானதாகவே பட்டது.
ராஜ்யசபா எம்.பி.யாக டெல்லி சென்ற கனிமொழி மாறனின் இடத்தை நிரப்பிட முயன்றார்தான். ஆனால் பழைய நிலை போலில்லாமல் டெல்லி அரசியல் ரொம்பவே கடினமாகி இருந்தது. கனி தன்னை அங்கே நிலைநிறுத்திக் கொள்ள முயன்ற சூழலில்தான் ‘கலைஞர் டி.வி.க்கு முறைகேடாக பணம் வந்து சேர்ந்த விவகாரம்.’ எனும் வழக்கு அவரை போட்டு அழுத்த துவங்கியது. இந்த வழக்கில் கைதாகி திகாரே சென்றார்.
எந்த டெல்லிக்கு தன் மகளை சந்தோஷம் மிக அனுப்பிவைத்தாரோ அதே டெல்லியின் சிறையிலிருந்து அவர் உடனடியாக திரும்பி வந்துவிட மாட்டாரா?! என்று கண்களில் நீர் வழிய காத்திருந்தார் கருணாநிதி. திகாரிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த கனிமொழியால் இனி டெல்லியில் அரசியல் செய்ய முடியாது என்று வட இந்திய அரசியல் விமர்சகர்கள் வேடிக்கை பேசினர்.
ஆனால் அதை தகர்த்து மீண்டும் டெல்லி அரசியலில் கால் வைத்து கவனம் ஈர்த்து வருகிறார் கனி. பா.ஜ.க.வுக்கு எதிராக தி.மு.க. எடுக்கும் மூவ்களுக்கு கூட்டு வலு சேர்க்கும் முயற்சியில் கனிமொழியின் பங்கு அலாதியாகத்தான் இருக்கிறது. குறிப்பாக குடியரசுத்தலைவர் தேர்தல் தொடர்பாக சமீபத்தில் டெல்லியில் சோனியா கூட்டிய உயர் தலைவர்கள் அடங்கிய ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க. சார்பாக பங்கேற்றவர் கனிதான். மம்தா மற்றும் ராகுலுக்கு அருகில் சீட் ஒதுக்கப்பட்டதோடு, ராகுலோடு நீண்ட நேரம் அரசியல் விவாதங்களில் கனி இருந்ததை காங்கிரஸ் முக்கிய புள்ளிகளே கண்டு மிரண்டு விட்டனர்.
பா.ஜ.க.வுக்கு எதிரான ஒரு அணி அமையும் மேடையாக ஸ்டாலின் காட்ட நினைக்கும் கருணாநிதி பிறந்த நாள் விழா மேடைக்கு பெரும் வலு கூட்டியிருப்பது கனியின் உழைப்புதான்.
பல மாநில தலைவர்களை சந்தித்து இந்த விழாவில் கலந்து கொள்ள சொல்லி தி.மு.க.வுக்காக கேன்வாஸ் செய்தது கனிமொழிதான்.
ஆக தேசிய அரசியலில் கனிமொழியின் பங்கு இவ்வளவு அலாதியாக இருக்கும் நிலையில் கருணாநிதியின் வைரவிழா அழைப்பிதழில் கனிமொழியின் பெயர் இடம்பெறவில்லையாம். விழாவின் தலைமை ஏற்கும் பேராசிரியர் அன்பழகன், முன்னிலை வகிக்கும் ஸ்டாலின், வரவேற்புரை ஆற்றும் துரைமுருகன் என்று தி.மு.க.வின் தலைமை கழக நிர்வாகிகளின் பெயர் பட்டியல் புரோட்டோகால்படி அச்சிடப்பட்டிருக்கிறது.
அதற்கு கீழே வாழ்த்துரை வழங்க வருகை தரும் ராகுல்காந்தி, நிதிஷ்குமார், லாலுபிரசாத் யாதவ், சரத்பவார், பரூக் அப்துல்லா, நாராயணசாமி என்று மாற்று இயக்க தலைவர்களின் பெயர்கள் வரிசை கட்டுகின்றன. இறுதியில் நன்றியுரையாற்றும் ஜெ.அன்பழகனின் பெயர் இருக்கிறது.
ஆனால் கனிமொழியின் பெயர் மிஸ்ஸிங்.
இப்படி நடக்கும் என்று தெரிந்ததாலோ என்னவோ கனிமொழி இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லையாம். ஆனால் அவரது தாய் ராஜாத்தியம்மாள் கொதித்துவிட்டார் ‘’தலைவரின் புதல்வியாக டெல்லியில் அலைந்து திரிந்து கட்சி வளர்க்கும் என் மகளின் பெயரை எப்படி இருட்டடிப்பு செய்யலாம்? வட இந்திய அரசியல் என்ன அவ்வளவு சாமான்யப்பட்டதா? அதில் நீச்சலிடித்து கரையேற அவள் படும் கஷ்டம் சாதாரணமானதா! இந்த வைரவிழா நிகழ்வில் ராகுலும், நிதிஷ்குமாரும், லாலுவும் வந்து அமர போவது யாரால் என் மகளின் தொடர் அழைப்பால்தானே? கட்சிக்காக இப்படி போராடுபவளை எப்படி தவிர்க்கலாம்?

தேர்தலில் பெண்களுக்கும் பெரிய இட ஒதுக்கீடு கொடுத்து, சட்டமன்றத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் அமர வேண்டும் என்று பாடுபட்டவர் தலைவர். அவரின் சொந்த மகள் கனி. ஆனால் தலைவரின் சட்டமன்ற வைரவிழா அழைப்பிதழில் அவளது பெயர் இல்லை!
இதுதான் தலைவரின் ‘மகளிர் முன்னேற்ற’ கொள்கைக்கு இப்போது கட்சியின் தலைவராக செயல்படுபவர்கள் கொடுக்கும் முக்கியத்துவமா?
தலைவர் நலமாக இருந்தால் இப்படி நடந்திருக்குமா? கட்சிக்காகவும், கட்சியை வளர்க்கும் தொலைக்காட்சிக்காகவும் அவள் சிறைக்கே சென்றாள்.
அப்பேர்ப்பட்ட தியாகம் செய்தவளின் பெயரை இருட்டடிப்பு செய்வது உச்சகட்ட பழிவாங்கல் குணம்.” என்று கொதித்திருக்கிறார். ராஜாத்தியம்மாளின் வருத்தத்தை கண்டு கனிக்கு ஆதரவு கூட்டமும் வெகுண்டெழுந்திருக்கிறது.
இது விழா நெருக்கத்தில் உட்கட்சிக்குள்ளும், கலைஞரின் குடும்பத்தினுள்ளும் ஏதாவது உரசலை, புகைச்சலை உருவாக்குமோ என்பதே பேராசிரியர் போன்றோரின் பயம்.
ஏற்கனவே இந்த விழா பெரிய ஈர்ப்பை உருவாக்கப்போவதில்லை என்று தமிழிசை சபித்து வருகிறார். இந்நிலையில் வைரவிழா கொண்டாட்டங்களுக்கு திருஷ்டிப் பொட்டாக உட்கட்சி பஞ்சாயத்தே அமைந்துவிடாமல் இருந்தால் சரி.
