கொள்ளையடித்து தமிழகத்தை பாதாளத்திற்கு தள்ளியது திமுக தான் என்றும், பணக்கார குடும்பமாக திமுக உருவெடுத்தது தான் அவர்களின் ஒரே சாதனை எனவும் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.

சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வழிக்காட்டுக்குழுவில் இடம் பெற்றதற்காக அமைச்சர் ஜெயக்குமாரை, அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சேவூர் ராமசந்திரன், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, வழிக்காட்டு குழு உறுப்பினர் மோகன் ஆகியோர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், திமுக பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என பொன் ராதாகிருஷ்ணன் கருத்திற்கு, அவரது தனிப்பட்ட கருத்திற்கு பதிலளிக்க முடியாது என்றும், பா.ஜ.க வின் சார்பில் மாநில தலைவர்கள், அகில இந்திய தலைவர்கள் தலைவர்கள் கருத்து கூறினால் மட்டுமே கருத்து கூற முடியும் என்றும், பொன் ராதாகிருஷ்ணன் கருத்து பா.ஜ.க கருத்தா என்பதை பா.ஜ க மேலிடம் தான் கூற வேண்டும் என்று கூறினார். மேலும், ஸ்டாலின் கருத்திற்கு பதிலளித்த அவர்,கொள்ளையடித்து தமிழகத்தை பாதாளத்திற்கு தள்ளியது திமுக தான் என்றும், பணக்கார குடும்பமாக திமுக உருவெடுத்தது தான் அவர்களின் ஒரே சாதனை என்றார். 

ஆனால் தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்த திமுக இதுக்குறித்து கூறுவது வேடிக்கையாக உள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், வழிக்காட்டு குழுவில் பெண்கள் இடம்பெறாதது குறித்த கேள்விக்கு, அகில இந்திய ரீதியில் பெண்களுக்கு உரிமை கொடுத்தது அதிமுக தான் என்றும், தேர்தல் நேரத்தில் பலக்குழுக்களை கட்சி அறிவிக்க உள்ளதாவகவும், அந்த குழுக்களை போடும்போது பெண்களுக்கு உரிமையளிக்கப்படும் எனவும் திட்டவட்டமாக கூறினார்.