காவிரி விவகாரத்தில் எப்படி உண்மை தெரிந்த பின்னர் ரஜினி மன்னிப்பு கேட்டாரோ அதேபோல பெரியார் குறித்து உண்மை தெரிந்த பின்னர் அவர் மன்னிப்பு கேட்பார் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார் .பெரியார் குறித்து தாம் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோர முடியாது என ரஜினி தெரிவித்துள்ள நிலையில் உதயநிதி இவ்வாறு கூறியுள்ளார் .  சமீபத்தில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் அதில் முரசொலி பத்திரிக்கை,  பெரியார் திமுக தலைவர் கருணாநிதி குறித்து கூறிய கருத்து  சர்ச்சையை ஏற்படுத்தியது .

இதையடுத்து திமுகவினர் மற்றும் திராவிட இயக்கத்தினர்  ரஜினியை கடுமையாக விமர்சித்தனர் .   அன்றே ரஜினிக்கு பதிலடி கொடுத்த உதயநிதி தன் எஜமானர்களுக்கு  கால் பிடிக்கும் காரியக்காரர் என்று ரஜினியை விமர்சித்ததுடன் ,  முரசொலி வைத்திருப்பவன் சுயமரியாதைக்காரன் ,  அவன் திமுக காரன் என்றும் கூறி பதிவிட்டிருந்தார் .  இந்நிலையில் திராவிடர் கழகம் ரஜினிக்கு எதிராக வழக்குத் தொடுக்கப் போவதாக அறிவித்துள்ளது .  அதேபோல் பெரியாரிய சிந்தனையாளர்கள் தமிழகம் முழுவதிலும் ஆங்காங்கே காவல் நிலையங்களில்  ரஜினிக்கு எதிராக புகார் கொடுத்து வருகின்றனர்.   இந்நிலையில் கருத்து தெரிவித்துள்ள ரஜினிகாந்த் பெரியார் குறித்து தான் பேசியது சரிதான் அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என கூறியுள்ளார் . இதனையடுத்துப் பேசிய  திமுக தலைவர் மு க ஸ்டாலின் , 

 

ரஜினிகாந்த் என்பவர்  அரசியல்வாதி அல்ல ,  அவர் ஒரு நடிகர் ,  அவரிடம் விரும்பி கேட்டுக்கொள்கிறேன் 95 ஆண்டு காலம் தமிழ் சமூகத்திற்காக போராடிய பெரியாரைப் பற்றிப் பேசும்போது  சிந்தித்து பேச வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் , இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் , பெரியார் குறித்து ரஜினி மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியதற்கு பதிலளித்தார், அதில்,  ரஜினி முறையாக அரசியலுக்கு வந்த பிறகு நாங்கள் அவருக்கு பதில் கொடுப்போம் என்றார்,  ரஜினி காவிரி விவகாரத்தில் உண்மை தெரிந்த பின்பு  எப்படி மன்னிப்பு கேட்டாரோ  அதேபோல பெரியார் விவகாரத்திலும்  உண்மை தெரிந்த பின்பு ரஜினி மன்னிப்பு கேட்பார் என்றார் . பெரியாரைப் பற்றி அவர் தெரியாமல் பேசிவிட்டார் நிச்சயம் அவர் அதற்கு மன்னிப்பு கேட்பார் என்றார்.