திமுகவில் 30 லட்சம் இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்ப்பது என இளைஞரணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சென்னையில் இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் என மொத்தம் 474 பேர் பங்கேற்றுள்ளனர். 

இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பேசிய இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞர் அணியில் 15 முதல் 30 வயதுள்ளோர் இளைஞரணியில் உறுப்பினராகலாம் என்ற விதியை மாற்றி, 18 முதல் 35 வயதுள்ள இளைஞர்களை உறுப்பினர்களாகச் சேர்க்கலாம் என்று தலைமைக் கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், உறுப்பினர்கள் அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய உறுப்பினர் அட்டை உடனுக்குடன் வழங்கப்படவுள்ளது என்றார். 

திமுக இளைஞரணி அமைப்பு, மண்டலம் வாரியாகப் பிரிக்கப்பட்டு, நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் செய்யப்படும். அதைத்தொடர்ந்து 3 மாதங்களுக்கு ஒரு முறை மண்டல மாநாடு நடத்தப்படும். அனைத்து மண்டல மாநாடுகளும் முடிந்தபின், மிகப்பெரிய அளவில் இளைஞர் அணி மாநில மாநாடு நடத்தப்படும் என்பதையும் அறிவித்தார்.

மேலும் இளைஞர்களை கட்சியில் இணைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 14 முதல் நவம்பர் 14ம் தேதி வரையிலான 2 மாதத்திற்குள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 10 ஆயிரம் பேருக்கு குறையாமல் மொத்தமாக 30 லட்சம் இளைஞர்களை உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று இளைஞரணி நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார் உதயநிதி. 

மக்களவை தேர்தலில் வட மாநிலங்கள் முழுதும் மாபெரும் வெற்றியை பெற்ற பாஜகவிற்கு தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களிலும் மரண அடி விழுந்தது. இதையடுத்து தென் மாநிலங்களில் பாஜகவின் பலத்தை கூட்ட அந்த கட்சி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாஜகவிற்கு சிம்மசொப்பனமாக திகழும் தமிழ்நாட்டில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை தீவிரமாக செய்துவருகிறது.

தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை விரும்பும் இளைஞர்களை கவர நாம் தமிழர், பாமக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் முயற்சி செய்துவரும் நிலையில், அதே முயற்சியை பாஜகவும் செய்துவருகிறது. இளைஞர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் கட்சியில் உறுப்பினராக சேர்த்து, தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் முயற்சிகளையும் பணிகளையும் அக்கட்சி தீவிரமாக செய்துவருகிறது. தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக முகாம்கள் அமைத்து உறுப்பினர்களை சேர்த்தது பாஜக. 

இந்நிலையில், தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளில் ஒன்றான திமுக, 2 மாதத்தில் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளது. திமுக இளைஞரணி, நிர்ணயிக்கப்பட்ட உறுப்பினர் சேர்க்கை இலக்கை எட்டுகிறதா என்பதை பார்ப்போம். பாஜகவின் உறுப்பினர் சேர்க்கைக்கு கடும் சவால் விடும் விதமாக 30 லட்சம் இளைஞர்களை சேர்க்கும் திமுகவின் திட்டம் நிறைவேறுகிறதா என்று பார்ப்போம்.