மெரினா கடற்கரையில் கலைஞர் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த கால நிகழ்வுகளை சுட்டிக்காட்டி ஸ்டாலின் மற்றும் தி.மு.கவிற்கு சோதனை காலம் துவங்க உள்ளதாக சிலர் சென்டிமென்ட் ஆரூடம் கூறி வருகின்றனர்.
மெரினா கடற்கரையில் கலைஞர் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த கால நிகழ்வுகளை சுட்டிக்காட்டி ஸ்டாலின் மற்றும் தி.மு.கவிற்கு சோதனை காலம் துவங்க உள்ளதாக சிலர் சென்டிமென்ட் ஆரூடம் கூறி வருகின்றனர். கலைஞர் மறைவை தொடர்ந்து மிக நீண்ட போராட்டத்திற்கு பிறகு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அவருக்கு சமாதி அமைக்கப்பட்டுள்ளது. கிண்டியில் தமிழக அரசு இடம் ஒதுக்கிய நிலையில் அதனை நிராகரித்து கலைஞருக்கு தற்போது மெரினாவில் நினைவிடம் அமைக்கப்பட உள்ளது. இந்த நிலையில் மெரினா கடற்கரையில் கலைஞருக்கு நினைவிடம் அமைய உள்ளது ஸ்டாலினுக்கும் சரி, தி.மு.கவிற்கும் சரி அவ்வளவு நல்லது அல்ல என்று கடந்த கால நிகழ்வுகளை கூறி சிலர் சொல்லும் ஆரூடம் திக் திக் வகையை சேர்ந்தது.
அதாவது தி.மு.க பொதுச் செயலாளராகவும் தமிழக முதலமைச்சராகவும் இருந்த அண்ணாதுரை 1969ம் ஆண்டு காலமானார். அவர் மறைவை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டார். மேலும் அண்ணாவிற்கு அங்கேயே நினைவிடமும் அமைக்கப்பட்டது. ஆனால் 1972ம் ஆண்டு தி.மு.கவில் பிரச்சனை வெடித்தது. தி.மு.க இரண்டாக உடைந்தது. அ.தி.மு.க உருவானது. இதே போல தமிழக முதலமைச்சராகவும் அ.தி.மு.க பொதுச் செயலாளராகவும் இருந்த எம்.ஜி.ஆர் 1987ம் ஆண்டு மறைந்தார். அவர் மறைந்த பிறகு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்திற்கு அருகே அடக்கம் செய்யப்பட்டார். அண்ணாவுக்கு நினைவிடம் எழுப்பியதை போலவே எம்.ஜி.ஆருக்கும் மெரினாவில் நினைவிடம் எழுப்பப்பட்டது. மேலும் எம்.ஜி.ஆர் மறைவை தொடர்ந்த அ.தி.மு.கவும் இரண்டாக உடைந்தது.
ஜெயலலிதா அணி – ஜானகி அணி என இரண்டு அணிகள் உருவாகின. பின்னர் ஜெயலலிதாவை அ.தி.மு.கவை கைப்பற்றி முதலமைச்சரானது தனி கதை. ஆனால் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் அவரது கட்சி இரண்டாக உடைந்தது. அண்மையில் கூட கடந்த 2016ம் ஆண்டு அ.தி.மு.க பொதுச் செயலாளராகவும் முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா காலமானார். ஜெயலலிதாவும் மெரினா கடற்கரையில் அண்ணா, எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு அருகே அடக்கம் செய்யப்பட்டார். ஜெயலலிதாவுக்கும் அங்கேயே நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. 
ஜெயலலிதா மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்தும் அ.தி.மு.க இரண்டாக உடைந்தது. அதாவது ஓ.பி.எஸ் தலைமையில் ஒரு அணியும், சசிகலா தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டன. இப்படியாக அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என மூவர் மறைவுக்கு பிறகு மூவருமே மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் தலைமையில் இயங்கிய கட்சிகள் மூன்று காலகட்டங்களில் பிளவை சந்தித்துள்ளன. இந்த நிலையில் தான் தி.மு.க தலைவராக இருந்த கலைஞர் மறைவை தொடர்ந்து அண்ணா நினைவிடத்தில் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த கால சென்டிமென்டுகளை வைத்து பார்க்கும் போது மெரினாவில் கலைஞர் அடக்கம் செய்யப்பட்டுள்ளதால் தி.மு.க மீண்டும் உடையும் என்கின்றனர் சிலர். அழகிரி, கனிமொழி போன்றோர் தங்கள் தேவைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் தி.மு.கவை உடைக்க முயற்சிக்கும் வாய்ப்பு இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இது போதாது என்று இதுநாள் வரை மெரினாவில் அடக்கம் செய்ப்பட்டுள்ள மூன்று தலைவர்களுக்குமே நேரடி அரசியல் வாரிசுகள் கிடையாது. அதாவது அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு மகனோ, மகளோ கிடையாது. மேலும் அவர்களின் ரத்த சம்பந்தமான உறவினர்களாலும் தமிழகத்தில் அரசியலில் சோபிக்க முடியவில்லை. எனவே கலைஞர் உடலும் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவரது வாரிசான ஸ்டாலினால் முதலமைச்சராக முடியாது என்றும் ஆரூடம் கூறுகின்றனர்.
