திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும் அவர் வகித்துவந்த செயல் தலைவர் பதவி, திமுகவிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. அதற்காக கட்சியின் சட்ட விதிகளில் கொண்டுவரப்பட்ட திருத்தமும் நீக்கப்பட்டது. 

கருணாநிதியின் மறைவை அடுத்து திமுகவின் புதிய தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து ஸ்டாலின் வகித்து வந்த செயல் தலைவர் பதவி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. திமுக தலைவராக இருந்த கருணாநிதி, வயது முதிர்வால் அரசியலிலிருந்து ஒதுங்கி ஓய்வெடுத்ததால், கட்சியை வழிநடத்துவதற்காக ஸ்டாலின் செயல் தலைவராக பொறுப்பேற்றார்.

அதற்காக திமுக சட்டவிதி 18ல் 4வது பிரிவை இணைத்து அதன்படி, கட்சியின் தலைவர் பதவி விலகினாலோ அல்லது நீண்ட நாட்களுக்கு பணியாற்ற முடியாத சூழல் உருவானாலோ செயல் தலைவர் ஒருவரை பொதுக்குழு நியமிக்கலாம் என சட்டவிதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. 

அதனடிப்படையில், திமுகவின் செயல் தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார் ஸ்டாலின். இந்நிலையில், கருணாநிதியின் மறைவிற்கு பிறகு ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்பார் என்பது உறுதியாக தெரிந்த விஷயமே. அந்த வகையில், கருணாநிதியின் மறைவை அடுத்து, திமுகவின் புதிய தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு போட்டியிட விரும்புவோரின் வேட்புமனுக்கள் நேற்று முன் தினம் பெறப்பட்டன. 

தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு ஸ்டாலின் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இன்று திமுக பொதுக்குழு கூடி நடைபெற்றுவருகிறது. இந்த பொதுக்குழுவில், திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், ஸ்டாலினை திமுகவின் தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

திமுகவின் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றதை அடுத்து, அவர் வகித்து வந்த செயல் தலைவர் பதவியும் அதற்காக கட்சியின் சட்ட விதிகளில் செய்யப்பட்ட திருத்தமும் நீக்கப்பட்டது.