அதிமுக அரசின் அடுக்கடுக்கான தோல்விகளை மக்கள் மன்றத்தில் சுட்டிக்காட்டி எடப்பாடியின் முகமூடியை கிழித்தெறிய சபதமேற்போம் என திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

திமுக அவசர செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. இதில் பொருளாளர் துரைமுருகன், திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் வெற்றி, நகர்புறங்களில் கூட்டணி கட்சிகளுக்கு இடஒதுக்கீடு, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக தோல்வி அடைந்த இடங்களுக்கு பொறுப்பான நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்து நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, இக்கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

தீர்மானங்கள் விவரம்;- 

* உள்ளாட்சி மன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியை வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.

*  மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி தேர்தலை உடனே நடத்திட வேண்டும். மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம்.

*  தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு அறிவித்திட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம்.

*  இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை என்ற அதிமுக அரசின் வஞ்சக நாடகத்திற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.

*  இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் எனக் கோரி தீர்மானம்.

* அ.தி.மு.க அரசின் அடுக்கடுக்கான தோல்விகளை மக்கள் மன்றத்தில் சுட்டிக்காட்டி எடப்பாடியின் முகமூடியை கிழித்தெறிய சபதமேற்போம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.