வருகிற சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என சசிகலாவின் சகோதரரும் அம்மா திராவிடர் கழக பொதுச்செயலாளருமான திவாகரன் கூறியுள்ளார்.

அம்மா திராவிடர் கழக சிவகங்கை மாவட்ட செயலாளர் கருப்பையாவின் இல்லத் திருமணத்தில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் பொதுச் செயலாளர் திவாகரன் மதுரை வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ’கொரோனா காலத்தில் கல்வித்துறையில் தமிழக அரசு சிறப்பாக செயல்படவில்லை. கல்வி துறை சார்ந்த வல்லுநர்களின் மூலமாக ஆலோசனை பெற்று கல்வி நிலையங்களை திறந்திருக்க வேண்டும். அதை செய்யத் தவறிவிட்டார்கள். 

யார் நல்லது செய்தாலும் நான் பாராட்டுவது வழக்கம். அந்த வகையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை பாராட்டிப் பேசினேன். அவர் சிறப்பாக செயல்படுகிறார். அதற்காக நான் திமுகவோடு சொல்கிறேன் என்பது தவறு. எந்தக் காலத்திலும் எனது கரை வேட்டியை மாற்றிக்கொள்ள மாட்டேன். எனது சகோதரி சசிகலா வைத்து இங்கிருந்த நபர்கள் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடி விட்டார்கள். அவர்கள் செய்த தவறுக்கு என் சகோதரி சிறைவாசம் அனுபவிக்க நேரிட்டது. அவர் விடுதலையாகி வந்த பிறகு என்ன செய்யப்போகிறார் என்பது இனிமேல்தான் தெரியும்.

 

ஜெயலலிதா மறைந்தபோது சசிகலா முதல்வராக வேண்டும் என்ற கருத்தை சொன்னவர் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், அதை நான் ஏற்கவில்லை. சசிகலாவின் முயற்சியின் காரணமாகவே தற்போது அதிமுக பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி நான்காண்டுகளாக ஆட்சியையும், கட்சியையும் கட்டி பாதுகாத்து உள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு குறித்த ஆறுமுக சாமி கமிஷன் விசாரணை முடியும் நிலைக்கு வந்துவிட்டது. தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரிடம் மட்டுமே விசாரணை நடத்த வேண்டியுள்ளது. 

இந்தியாவில் தமிழர்களாகிய நாம் இரண்டாம் தர குடிமக்களாகவே இருந்து வருகின்றோம். தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கொடுப்பதில்லை. கல்வி உள்ளிட்ட அனைத்திலும் நாம் புறக்கணிக்க படுகின்றோம். தமிழகத்தில் வட இந்தியர்கள் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. இந்தியில் பேசுபவர்களுக்கு பொருட்களின் விலையை குறைத்து கொடுக்கின்றனர். தமிழில் பேசுபவர்களுக்கு பொருட்களின் விலை குறைக்கப்படுவதில்லை. இப்படி தமிழகத்தில் வட இந்தியர்கள் இந்தியை வளர்த்து வருகின்றனர். 

விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என கூறுகின்றனர். களைக்கொல்லி, பூச்சிமருந்து ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டி வரியை அவற்றின் விலை உயர்ந்திருக்கிறது. திருமாவளவன் பெண்களை மதிக்கக் கூடியவர். அவர் எந்த இடத்திலும் பெண்களை அவதூறாகப் பேசவில்லை. மனுஸ்மிருதியில் என்ன இருக்கிறதோ அதைத்தான் கூறினார். இன்று இருக்க கூடிய நிலையில் பார்த்தோமென்றால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கே அதிக வெற்றி வாய்ப்புகள் உள்ளது’’என அவர் தெரிவித்தார்.