வரும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் திமுக காணாமல் போய்விடும் என்றும், அதிமுக ஹாட்ரிக் வெற்றி பெற்று சாதனை படைக்கும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார். மதுரை மாநகரில் உள்ள அனுப்பானடி அப்பகுதியில் உள்ள 25க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண உதவி வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூர் ராஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-  

தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களுக்கும் அம்மா வழியில் சிறந்த ஆட்சியை முதலமைச்சர், துணை முதலமைச்சர் வழங்கி வருகின்றனர். நாட்டிலேயே மருத்துவ காப்பீட்டு துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகமாக தமிழகத்தில் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக இந்தியாவில் பல்வேறு விருதுகளை கூட்டுறவு துறை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாது கொரோனா காலகட்டத்திலும் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு 1000 ரூபாய்   நிவாரண உதவியை அமைச்சர் வழங்கினார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுபோன்று வழங்கப்படவில்லை. அரசு கொண்டு வந்த வேளாண்  மசோதா திட்டத்தை வைத்து  திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அரசியல் செய்து கபட நாடகம் ஆடுகிறார். 

திமுக ஆட்சியில் தமிழக உரிமைகள் எல்லாம் தாரைவார்க்கப்பட்டது. காவேரி நதிநீர் ஒப்பந்தத்தை புதுப்பிக்கக் திமுக தவறிவிட்டது. முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் தமிழகத்திற்கு துரோகம் செய்யப்பட்டது. ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் போன்ற திட்டங்களுக்கு கையெழுத்து போட்டு விவசாயிகளை வஞ்சித்தவர் ஸ்டாலின்.  தமிழக உரிமைகளை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் காத்து வருகின்றனர். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அம்மா அரசுக்கு மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் எப்படி 3வது முறையாக ஆட்சியைப் பிடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தாரோ அதேபோல் மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து அம்மாவின் அரசு ஹாட்ரிக் சாதனை படைக்கும். 2011 தேர்தலுக்கு பின்னர் திமுக காணாமல் போய்விடும் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறினர்.