சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. “கோவையில் ராணுவ உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்கூடத்தை தொடங்க மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளேன்.  வீடு இல்லாத மக்களுக்கு காங்கிரீட் வீடு கட்டித்தரப்படும். எதிர்காலத்தில் தமிழகத்தில் ஏழை என்ற சொல்லே இருக்காது. 
வாழை நாரில் இருந்து துணி, பிஸ்கட், மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையை 400 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் வாழை விவசாயிகள் பயன்பெற முடியும். நீட் தேர்வை வைத்து திமுக பொய் சொல்லி வருகிறது. திமுகவினர் தங்களது தேர்தல் வாக்குறுதிகளை ஒருகாலத்திலும் நிறைவேற்றியதில்லை. அதிமுகவின் தேர்தல் அறிக்கை அனைத்து மக்களும் நன்மை பெறக் கூடிய வகையில் இருக்கும்.
திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாததால்தான் மக்கள் திமுகவை புறக்கணித்துவிட்டனர். அதிமுக ஆட்சியைக் கலைக்க மு.க. ஸ்டாலின் எடுத்த அவதாரங்களை நாங்கள் தவிடு பொடியாக்கினோம். எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் திமுக உடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என்று எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.