திமுக ஆட்சியின்போது என்னென்ன நடைமுறைகளைக் பின்பற்றி டெண்டர்கள் விடப்பட்டதோ, அதே மாதிரிதான் நாங்களும் (அதிமுக) டெண்டர் விட்டிருப்பதாகவும், இதற்காக நீதிமன்ற படியேறி இருப்பவர்கள் அதற்கான விளைவுகளை எதிர்கொள்வார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக கூறியுள்ளார்.

 

முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 110-வது பிறந்தநாள் விழா நேற்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. காஞ்சிபுரம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை அடுத்து, காஞ்சி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் முதலமைச்சர் எடப்பாடி கலந்து கொண்டார். 

அப்போது அவர் பேசியதாவது: அ.தி.மு.க ஐ.சி.யுவில் இருக்கிறது என எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார். நாங்க எல்லாம் திடமாகத்தான் இருக்கிறோம். ஆறு மாதத்திற்கு ஒரு முறை நீங்கதான் லண்டன் போகிறீர்கள். இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்று எத்தனையோ முறை போராட்டத்தை தூண்டி விட்டார்கள். அது எடுபடவில்லை. 

இப்போது ஊழல் என்ற ஒன்றை கையில் எடுத்து இருக்கிறார்கள். இன்று முதலமைச்சர் நெடுஞ்சாலைத் துறையிலே ஊழல் செய்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்கள். நீங்க என்ன நடைமுறைகளை பின்பற்றி டெண்டர் விட்டீங்களோ, அதே மாதிரிதானே நாங்களும் டெண்டர் விட்டிருக்கிறோம். இதற்காக நீதிமன்ற படியேறி இருக்கிறார்கள். அதற்கான விளைவுளை அவர்கள் எதிர்கொள்வார்கள். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.