“தருமபுரியில் திமுக வேண்டுமானால் தேர்தலில் தோற்று இருக்கலாம். தொண்டனின் பல வருடங்களுக்குப் பிறகு பழைய வீரத்தை பார்த்த மகிழ்ச்சி." என்று பதிவிட்டுள்ளார்.
தருமபுரி மொராப்பூரில் நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் அக்கட்சியினரும் திமுகவினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
ஏழு தமிழர்களை விடுவிக்க வேண்டும், சிறையிலிருந்து இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்டம் மொராப்பூர் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் பங்கேற்றார். இக்கூட்டத்தில் அவர் பேசுகையில், திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும் திமுகவினரையும் தமிழக முதல்வரையும் ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த திமுகவினர் பேச்சை நிறுத்தும்படி மேடையில் ஏறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மேடையில் நாம் தமிழர் மற்றும் திமுகவினர் இடையே தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது. மைக் கீழே தள்ளிவிடப்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், இரு தரப்பினரையும் விலக்கிவிட்டனர். மேலும் மொராப்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து இந்த மோதல் சம்பந்தமாக விசாரித்து வருகின்றனர். இதன் காரணமாக நாம் தமிழர் கட்சியின் கூட்டம் பாதியிலேயே ரத்தானது. மேலும் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால் போலீஸார் பாதுகாப்பை அதிகரித்தனர். 
இந்நிலையில் இந்த மோதல் வீடியாவை வேலூர் திமுக ஐ.டி. விங்கைச் சேர்ந்த ஒருவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். அதோடு, “தருமபுரியில் திமுக வேண்டுமானால் தேர்தலில் தோற்று இருக்கலாம். தொண்டனின் பல வருடங்களுக்குப் பிறகு பழைய வீரத்தை பார்த்த மகிழ்ச்சி. தருமபுரி மொராப்பூரில் நாம் தமிழர் தம்பிகளை அலறவிட்ட திமுக மொராப்பூர் ஒன்றிய செயலாளர் செங்கண்ணனுக்கு கோடி நன்றிகள்” என்று பதிவிட்டுள்ளார், இந்த வீடியோவை திமுகவினர் அதிகமாகப் பகிரத் தொடங்கியுள்ளனர்.
