கன்னியாகுமரி, தேனி போல் இன்னும் சில மாவட்டங்களில் இப்படி காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தனித்துப் நின்று தி.மு.க.வுக்கு குடைச்சல் தருகின்றன
அ.தி.மு.க.வின் கூட்டணியிலிருந்து பா.ஜ.க. விலகியதால் தனி கட்சியாகவே களம் காண்கின்றன இரண்டும். த.மா.கா.வுக்கு மட்டும் ஆங்காங்கே சில இடங்களை ஒதுக்கிவிட்டு, தங்களின் இரட்டை இலை சின்னத்திலேயே நிற்க வைத்துள்ளது அ.தி.மு.க. ஆனால் தி.மு.க, தான் சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது போலவே அதே மெகா கூட்டணியுடன் களமிறங்கியுள்ளது. தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட்கள், ம.தி.மு.க., வி.சி.க., கொ.ம.தே.க., மனிதநேய மக்கள் கட்சி மற்றும் சில இஸ்லாமிய அமைப்புகள் என்று ஜைஜாண்டிக்காக இருக்கிறது அக்கூட்டணி.
அப்படியானால் தமிழகம் முழுக்க வளைத்து வளைத்து வாக்குகளை அள்ளிவிடும் போல இருக்குதே ஆளுங்கட்சி கூட்டணி? என்று பிரமித்தால், வந்து விழும் பதிலோ வேறு மாதிரியாக இருக்கிறது. அதாவது தி.மு.க. கூட்டணிக்குள் ஏகப்பட்ட முட்டல் மோதல்கள், முறைப்பு விறைப்புகளாம். விடுதலை சிறுத்தைகளுக்கு பல மாநகராட்சிகளில் ஒரு சீட் கூட ஒதுக்கவில்லை! என்பதால் கடும் கோபத்தில் உள்ளனர். கோயமுத்தூரில் கொ.ம.தே.க.வுக்கு கூட ஒரு சீட் ஒதுக்கியுள்ளனர் ஆனால் தங்களை தண்ணீரில் விட்டுவிட்டனர் என்று கொதிக்கிறார்களாம் அம்மாவட்ட விடுதலை சிறுத்தைகள்.
கேட்ட அளவில் பாதி கூட சீட் கிடைக்காத காரணத்தினால் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் பலர் பல இடங்களில் தி.மு.க. கூட்டணியை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். மற்ற சிறு கட்சிகளின் நிலையும் இப்படித்தான் இருக்கிறது.

அப்படியானால் காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுடன் மிக நெருக்கமாக இருந்து தேர்தலை எதிர்கொள்கிறதா? என்று கேட்டுவிடாதீர்கள். அடிதடி நடக்காதது ஒன்றுதான் குறை, இருவருக்குள்ளும்! என்கிறார்கள்.
காங்கிரஸின் செல்வாக்கு அதிகமாக இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்திலேயே அக்கட்சிக்கு போதுமான சீட்களை வழங்கவில்லையாம். இதனால், அங்கே தனித்து நிற்கிறது அக்கட்சி. அவர்களோடு கம்யூனிஸ்ட்களும் தனியே நின்று தி.மு.க.வுக்கு குடைச்சல் தருகின்றனர்.
“தி.மு.க. குறைவான இடங்களை மட்டுமே தருவேன் என்றது. அதுக்கு எப்படி சம்மதிக்க முடியும்? அதான் தனியா நிக்றோம். உண்மையை சொல்றதுன்னா இம்மாவட்த்துல போட்டியே எங்களுக்கும் தி.மு.க.வுக்கும் நடுவுலதான்.” என்று ஷாக் கொடுக்கிறார் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால். இவருக்கு ஆதரவாக பேசும் காங்கிரஸின் பிரின்ஸ் எம்.எல்.ஏ. “நாங்க இப்படி நிக்குறதுல என்ன தப்பு? இந்த மாவட்டத்துல தி.மு.க. வலுவாக இல்லை. அவுங்க போட்டியிட்டா தோல்விதான் கிடைக்கும். ஆனா நாங்க ஸ்டிராங். அதனலாதான் நாங்க தனியா போட்டி போடுறோம்.” என்கிறார் அதிரடியாக.

கன்னியாகுமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான செல்லசாமி “இந்த மாவட்டத்துல பல இடங்கள்ள எங்க கட்சிக்குன்னு வலுவான கட்டமைப்பு இருக்குது. ஆனால் தி.மு.க.வோ எங்களுக்கு முறையான எண்ணிக்கையில சீட் ஒதுக்காம, எங்களோட உழைப்பை மட்டும் பயன்படுத்திக்க நினைச்சுது. அதனாலதான் பார்த்தோம், சட்டுன்னு தனியா களமிறங்கிட்டோம்.” என்று அசால்ட் பண்ணுகிறார்.
கன்னியாகுமரியில் மட்டுமில்லை, இன்னும் பல மாவட்டங்களில் இந்த முட்டல் மோதல் நிலவுகிறது. தேனி வடக்கு மாவட்டத்திலும் இதே கதைதான். வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன் “நாங்க கண்டிப்பாக வெற்றி பெறக்கூடிய வார்டுகளை எங்களுக்கு தி.மு.க. தரலை. அவங்க கொடுக்குறதை வாங்கிக்கிட்டு நிக்குறதுக்கு நாங்க ஒண்ணும் அவங்களோட அடிமைகள் இல்லை. அதனாலதான் தேனி, பெரியகுளம், போடி ஆகிய மூணு நகராட்சிகளிலும், பனிரெண்டு பேரூராட்சிகளிலும் தனியா போட்டியிட்டு பிரசாரத்தில் பட்டையை கெளப்புறோம்பே. மக்கள் ஆதரவு அமோகமா இருக்குல்லா.” என்கிறார்.

கன்னியாகுமரி, தேனி போல் இன்னும் சில மாவட்டங்களில் இப்படி காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்றவை தனித்துப் போட்டியிட்டு தி.மு.க.வின் வெற்றிக்கு குடைச்சல் தருகின்றனர். இந்த லிஸ்ட்களை முதல்வர் ஸ்டாலின் கேட்டு வாங்கி பார்த்துவிட்டு, தன் கட்சியின் மிக முக்கிய நிர்வாகிகளுக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அவர்கள் அதை அப்படியே காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் கம்யூனிஸ்ட்களின் செயலாளர்கள் முத்தரசன் மற்றும் பாலகிருஷ்ணனிடம் ஒப்புவித்துள்ளனர். இதை கேட்ட அவர்களுக்கு முகம் இறுகிப் போனதாம்.
அது என்ன என்பது மேயர், நகரசபை தலைவர்கள் பதவியேற்புக்கு பின் தெரியும்! என்கிறார்கள்.
சம்பவம் இருக்குது!
