பகுத்தறிவு கொள்கையையும், பெரியாரையும் உயர்த்தி பிடித்துக் கொண்டு கடவுள் மறுப்புக் கொள்கையை உரக்க முழங்கி வரும் திமுக விஐபிகள் காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க குவிந்து வருகின்றனர்.

 

காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு அத்திவரதர் கடைசி 10 நாட்கள் மட்டுமே நின்ற கோலத்தில் காட்சியளிப்பார் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அத்திவரதரை முக்கிய பிரமுகர்கள் பலர் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று அத்திவரதரை தரிசனம் செய்தார். அவருடன் நெருங்கிய உறவினர்களுடன் வந்து, அத்திவரதரை தரிசனம் செய்தனர். வசந்த மண்டபத்திற்கு சென்ற, துர்கா, அத்திவரதருக்கு பச்சை பட்டாடை, பிரம்மாண்ட மலர் மாலை அணிவித்து தரிசனம் செய்தார். திமுக முக்கிய நிர்வாகிகளும் காஞ்சிபுரத்தில் குவிந்து வருகின்றனர். 

இதேபோல் தங்களது குடும்பத்தினரும், உறவினர்களும் அத்திவரதரை தரிசிக்க சிறப்பு அனுமதி கேட்டு கடிதம் எழுதி வருகின்றனர் திமுக எம்.பிக்கள். ஜெகத்ரட்சகன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தனது மனைவி அனுசுயா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் 6 பேரை சிறப்பு தரிசனம் செய்ய அனுமதிக்குமாறும் விஐபி பாஸ் வழங்குமாறும் கடிதம் எழுதியுள்ளார். அதே போல் திமுக ராஜ்யசபா எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு தங்களது உறவினர்கள் தரிசிக்க சிறப்பு தரிசனத்திற்கு விஐபி பாஸ் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.  இந்தக் கடிதங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

திமுக, இந்துக்களுக்கு எதிரான கட்சி விமர்சனம் செய்யப்பட்டு வரும் நிலையில், அக்கட்சி தலைவரின் மனைவியே கோயில் கோயிலாக சாமி தரிசனம் செய்து வருகிறார் என்று வழக்கமாக எழும் பேச்சு, சமூகவலைதளங்களில் கொடிகட்டி பறக்க துவங்கியுள்ளது. திமுக நிர்வாகிகளும் கோயில்களுக்கு சென்று வருவதால் அவர்களது பகுத்தறிவு பல்லிளித்து வருகிறது.