இந்த வருடத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நிச்சயம் மறக்க மாட்டார். காரணம், அவர் லோக்சபா எம்.பி.யானதும் இந்த ஆண்டுதான். இதன் மூலம் அவரது புகழ் பெரிதானது. அதேபோல்  இந்து ஆலயங்களை தன் பேச்சினால் சீண்டி, கோடானு கோடி இந்துக்கள் மற்றும் பல மத தலைவர்களின் கண்டனத்தையும் வாங்கிக் கட்டியதும் இந்த ஆண்டுதான். இதன் மூலம் அவரது புகழ் சிறுத்திருக்கிறது. 

திருமாவின் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருப்பது தி.மு.க.வின் கூட்டணியில். தி.மு.க. எப்போதுமே தன்னை இந்துக்களுக்கு எதிரானவர்களாக காட்டியதன் மூலம் பெரியளவில் வாக்கு வங்கியை இழந்து கிடக்கிறது. இதனால் இனியும் இந்துக்களை சீண்டிட வேண்டாம்! என்று அக்கட்சியின் தலைமை முடிவெடுத்திருந்தது. இந்த நிலையில்தான் அதன் கூட்டாளியான விடுதலைச் சிறுத்தைகளின் திருமா இப்படி பேசி மீண்டும் அக்கூட்டணிக்கு எதிராக இந்துக்கள் திரளும் ஒரு சுழலை உருவாக்கிவிட்டிருக்கிறார். 

சூழல் இப்படியிருக்கும் நிலையில், தி.மு.க.வின் முக்கிய நிர்வாகி ஒருவரை இந்த பிரச்னைக்காக திருமாவுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் யார் தெரியுமா? ஜஸ்ட் சில மாதங்களுக்கு முன்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து தி.மு.க.வுக்குள் வந்து இணைந்த தங்கத் தமிழ்ச்செல்வன் தான். 

ஒரு பேட்டி ஒன்றில், இந்த விவகாரம் குறித்துப் பேசியிருக்கும் தங்கம் “இதெல்லாம் நல்லதே இல்லண்ணே. இந்துவோ, கிறிஸ்டியனோ அல்லது முஸ்லீமோ எந்த மதத்தின் கோயிலையும் விமர்சனம் செய்து பேசுவது நல்லதில்லை. அவங்கவங்களுக்கு தனித்தனி வழிபாடு முறை இருக்கிறது. 

அதுல போயி அடுத்தவங்க ஏன் மூக்கை நுழைக்கணும்? இதுதான் என்னோட தாழ்மையான கருத்து! திருமா மட்டுமில்லை, யார் பேசினாலும் இது தப்புதான்.” என்று சொல்லியிருக்கிறார். 

தங்கத்தமிழ் செல்வன் இப்படி இடித்துப் பேசியதை கண்டு கடுப்பான விடுதலை சிறுத்தைகளின் நிர்வாகிகள், தி.மு.க.விடம் ‘உங்க கட்சியில நேத்து சேர்ந்தவரெல்லாம் எங்க தலைவரை பற்றி உரசி பேசுற அளவுக்கு வளர்த்து விடுறீங்க?’ என்று கடுப்பாகி இருக்கின்றனர். 

அதற்கு உடனடியாக ‘அவர் தாழ்மையாகதானே தன் கருத்தை சொல்வதா சொல்லியிருக்கார். இதுல என்ன தப்பு இருக்குது? உங்க தலைவர் பேசினது தப்புதானே!’ என்று வக்காலத்து வாங்கியுள்ளது தி.மு.க. 

உடனே விடுதலை சிறுத்தைகளின் இணையதள அணியினர் சிலர் ‘தங்கத்தை இப்படி பேச தூண்டிவிட்டதே அறிவாலய வட்டாரம்தான் போல. அதனால்தான் உடனடியாக அவரை காப்பாற்றி பேசுகிறார்கள். இன்னைக்கு எங்க தலைவர் பேசுனது தப்புன்னா, இதுக்கு முன்னாடி பல தடவை கருணாநிதி இந்துக்களை மிக மூர்க்கமா திட்டி பேசியிருக்காரே, அது மட்டும் சரியா?’ என்று பொங்கியிருக்கின்றனர். 
அவ்வளவு சீக்கிரம் இது முடியாது போலிருக்குதே!