கடந்த 2018ம் ஆண்டு திருவண்ணாமலையில் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளர் ஆ.ராசா, அண்ணன் எவ வேலு வெறும் மாவட்டச் செயலாளர் அல்ல. அவர் திமுகவை வழிநடத்தி வருபவர். ஸ்டாலினையும் அவர் தான் வழிநடத்துகிறார். அண்ணன் எ.வ வேலுவால் தான் திமுக 2016 தேர்தலில் 89 எம்எல்ஏக்களை பெற முடிந்தது. இப்படி பேசினார் ஆ.ராசா. அந்த அளவிற்கு மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் எ.வ.வேலு. இவர் வெறும் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் மட்டும் அல்ல.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தில் ஒரு அங்கம் என்றே குறிப்பிடலாம். சென்னையில் காலை முதல் இரவு வரை வேலுவை ஸ்டாலின் வீட்டில் பார்க்கலாம். கட்சியின் பொருளாளராக ஸ்டாலின் இருந்தது முதல் தற்போது வரை கட்சியின் வரவு செலவு முதல் ஸ்டாலின் வீட்டு வரவு செலவு வரை அனைத்தையும் கவனித்துக் கொள்பவர் எவ வேலு தான். ஸ்டாலினுக்கு மட்டும் அல்ல அவரது மனைவி துர்காவின் ஆசியையும் பெற்றவர் வேலு. தற்போது கட்சியில் அதிகாரத்திற்கு வந்திருக்கும் உதயநிதிக்கும் வேலு மிகவும் நெருக்கம். உதயநிதிக்கு இளைஞர் அணிச் செயலாளர் பதவியை கொடுக்க ஸ்டாலினை சம்மதிக்க வைத்ததே எவ வேலு தான் என்கிறார்கள்.

இப்படி கட்சியில் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமாக வலம் வரும் எவ வேலு தான் மாவட்டச் செயலாளர் நியமனம் முதல் சாதாரண கிளைச் செயலாளர் நியமனம் வரையிலான பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கூடியவர். கட்சி சார்பில் மட்டும் அல்ல ஸ்டாலின் தொடர்புடைய நிகழ்ச்சிகளுக்கான அனைத்து செலவுகளையும் எவ வேலுவே ஏற்றுக் கொள்வார். இதனால் ஸ்டாலின் ராஜினாமா செய்த பிறகு பொருளாளர் பதவி தனக்கு கிடைக்கும் என்று காய் நகர்த்தினார். ஆனால் சீனியரான துரைமுருகன் அந்த பதவியை கைப்பற்றினார். இந்த நிலையில் பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் சென்ற நிலையில் பொருளாளர் பதவி மீது மீண்டும் கண் வைத்தார் எவ வேலு.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அதாவது கொரோனா பிரச்சனைக்கு முன்னர் பொதுக்குழுவை கூட்டிபொதுச செயலாளரை தேர்வு செய்ய ஸ்டாலின் முடிவு செய்தார். அப்போது எவ வேலுவை பொருளாளர் ஆக்குவது என்றும் அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் கொரோனா காரணமாக பொதுக்குழு ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கூட உள்ள பொதுக்குழுவில் டி.ஆர்.பாலுவை பொருளாளர் ஆக்க ஸ்டாலின் முடிவு செய்துவிட்டார். குறுகிய காலத்திற்குள் எவ வேலுவை ஒதுக்கி டி.ஆர்.பாலுவை ஏன் ஸ்டாலின் தேர்வு செய்தார் என்று திமுகவினரே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்கு காரணம் எவ வேலுவின் கடந்த கால அரசியல் பயணம் என்கிறார்கள். அதிமுக தொடங்கி ஜானகி அணி, ஜெயலலிதா அணி, ஆர்.எம்.வீரப்பன் கட்சி, பாக்யராஜ் கட்சி, தமாகாவில் இணைய முயற்சி என அவரது அரசியல் நிலைப்பாடுகள் கடந்த காலங்களில் பல கட்சிகளை சார்ந்திருந்தது. மேலும் ஜாதி அடிப்படையிலும் அவர் நாயுடு சமூகத்தை சேர்ந்தவர். இந்த இரண்டும் தான் எவ வேலுவை தற்போதைக்கு உயர் பதவியில் அமர வைக்க தடையாக இருந்ததாக சொல்கிறார்கள். அதோடு கடந்த சில ஆண்டுகளாக கட்சியில் ஏராளமான விரோதிகளையும் எவ வேலு சம்பாதித்து வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.

அதிலும் அறிவாலயத்தில் செல்வாக்குடன் உள்ள சிலரை எவ வேலு பகைத்துக் கொண்டதால்அவர்கள் தான் எவ வேலுவுக்கு எதிராக சில விஷயங்களை ஸ்டாலினிடம் கூறி அவரை பொருளாளர் பதவியில் அமரவிடாமல் தடுத்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். அதே சமயம் டி.ஆர்.பாலு மீது அதிருப்தி இருந்தாலும் தற்போதைய சட்டமன்ற தேர்தல் சூழலில் அவரைத் தவிர வேறு யாரும் பொருளாளர் பதவிக்கு பொருத்தமானவர்கள் இல்லை என்று ஸ்டாலினே அவரை மீண்டும் தேர்வு செய்ததாக சொல்கிறார்கள்.