தி.மு.க பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு நேரடியாக வேட்புமனு தாக்கல் செய்தார். தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் துரைமுருகன், அதற்கு வசதியாக பொருளாளர் பதவியில் இருந்து விலகினார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில்  பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு துரைமுருகன், டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு,  இன்று நடைபெற்ற தி.மு.க பொதுக்குழுவில் வெளியானது. 

ஒருவழியாக குடும்பத்தினரை சம்மதிக்க வைத்து, கட்சியினரையும் சமாளிக்கும் விதமாக ஸ்டாலின் துரைமுருகன் மற்றும் டி.ஆர்.பாலுவிற்கு பதவிகளை கொடுத்துள்ளார்.  தி.மு.க பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் அன்பழகன் மறைவுக்குப் பிறகு புதிய பொதுச்செயலாளரைத் தேர்வு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. `சீனியாரிட்டி அடிப்படையில் பொருளாளராகப் பதவிவகிக்கும் துரைமுருகனே தேர்வு செய்யப்படுவார்' என அப்போது தகவல் வெளியானது. இதற்காக தனது பொருளாளர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து, மார்ச் மாதம் நடக்க வேண்டிய பொதுக்குழு, கொரோனா பரவல் காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து, ` பொருளாளராக துரைமுருகனே தொடர்வார்' எனவும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். இதனால் கட்சி நிர்வாகிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.

இந்தநிலையில், துரைமுருகனுக்கு ஆதரவாக வேலூர், ஆம்பூர் பகுதி தி.மு.க நிர்வாகிகள் பணம் கட்டினர். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி என்பதால், டி.ஆர்.பாலுவுக்காக தா.மோ.அன்பரசன், தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் பணம் கட்டினர். `இந்தப் பதவிகளுக்கு நாங்களும் போட்டியிட விரும்புகிறோம்' என வேறு எந்த சீனியர்களும் பணம் கட்டவில்லை. இதையடுத்து, துரைமுருகனும் டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.