Asianet News TamilAsianet News Tamil

ஒரே அமைச்சர் எல்லாத்துறைக்கும் வக்காலத்து வாங்குவது வெட்கக்கேடு... ஜெயக்குமார் மீது கடுப்பான துரைமுருகன்..!

தனது துறை ஊழல் குற்றச்சாட்டில் தன் உறவினர்களுக்கு ஒப்பந்தம் கொடுத்து உயர் நீதிமன்றமே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது அதிமுக ஆட்சியில்தான்! அண்ணன் தம்பி அத்தனை பேருக்கும் கான்டிராக்ட் கொடுக்கும் சிண்டிகேட் அமைத்துள்ள உள்ளாட்சித் துறை அமைச்சர் இருப்பது இந்த ஆட்சியில்தான்

DMK Treasurer duraimurugan slams minister jayakumar
Author
Tamil Nadu, First Published May 4, 2020, 5:57 PM IST

கோயம்பேடு நோய்த் தொற்றையே கவனிக்க முடியாமல், சென்னையை பீதியில் மூழ்கடித்துக் கொண்டு இருக்கும் முதல்வருக்கு அமைச்சர் ஜெயக்குமார் முந்திக் கொண்டு ஒரு நாலாந்தர அறிக்கையை ஏன் வெளியிட வேண்டும் என திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஊரடங்கு நேரத்தில் ஏன் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விடுவதற்கு அவசரம் காட்டி, அதே ஊரடங்கு காலத்திலேயே ஆன்லைனில் டெண்டர் தாக்கல் செய்யத் தேதியையும் நிர்ணயித்தீர்கள் என்று முதல்வரும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் கேள்வி கேட்டால், அமைச்சர் ஜெயக்குமார் சம்மன் இல்லாமல் ஆஜராகி பதில் என்ற போர்வையில் உளறல்கள் நிரம்பிய ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

DMK Treasurer duraimurugan slams minister jayakumar

ஊரடங்கில் டெண்டர் விட்ட துறை அமைச்சருக்கே இல்லாத கவலை ஏன் அமைச்சர் ஜெயக்குமாருக்கு வந்தது? கோயம்பேடு நோய்த் தொற்றையே கவனிக்க முடியாமல், சென்னையை பீதியில் மூழ்கடித்துக் கொண்டு இருக்கும் முதல்வருக்கு அமைச்சர் ஜெயக்குமார் முந்திக் கொண்டு ஒரு நாலாந்தர அறிக்கையை ஏன் வெளியிட வேண்டும்? முதல்வர் துறையின் ஊழலை மறுப்பதில் இவருக்கு என்ன சொந்த லாபம்? அதிமுக ஆட்சியில் டெண்டர்களின் மதிப்பீடுகள் தயாரிக்கும் லட்சணமும் ஆன்லைன் டெண்டர்களில் நடப்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஊரே சிரிப்பதுதான்!

டெண்டர் குறித்துப் பல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்து அதிமுக ஆட்சியின் டெண்டர் முறைகேடுகளைப் பார்த்து நல்லோர் அனைவரும் கைகொட்டிச் சிரித்துள்ளார்கள். கமிஷன் - கரெப்ஷன் - கலெக்‌ஷன் என்ற ஊழல் தந்திரத்தின் அடிப்படையில் இயங்கும் அதிமுக ஆட்சிக்கும் அதில் அமைச்சராக உள்ள ஜெயக்குமாருக்கும் நல்லாட்சி தந்த திமுக பற்றி பேசுவதற்கோ அல்லது அப்பழுக்கற்ற பொதுவாழ்வினை தனது அசையாச் சொத்தாக வைத்திருக்கும் திமுக தலைவர் பற்றிக் குறை கூறுவதற்கோ சிறிது கூட தகுதி இல்லை!

DMK Treasurer duraimurugan slams minister jayakumar

தனது துறை ஊழல் குற்றச்சாட்டில் தன் உறவினர்களுக்கு ஒப்பந்தம் கொடுத்து உயர் நீதிமன்றமே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது அதிமுக ஆட்சியில்தான்! அண்ணன் தம்பி அத்தனை பேருக்கும் கான்டிராக்ட் கொடுக்கும் சிண்டிகேட் அமைத்துள்ள உள்ளாட்சித் துறை அமைச்சர் இருப்பது இந்த ஆட்சியில்தான்! இந்தியாவிலேயே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட ஒரே முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்! ஏன், ஊழல் வழக்கு நிரூபிக்கப்பட்டு, சிறைத் தண்டனை பெற்ற முதல்வரைக் கொண்ட ஒரே ஆட்சியும் அதிமுக ஆட்சிதான்! அமைச்சர் முதல் முதல்வர் வரை ஊழல் சாம்ராஜ்யத்தில் மூழ்கி கஜானாவை காலி செய்து கொண்டிருப்பதும் இந்த ஆட்சியில்தான்!

ஆனால், இவற்றையெல்லாம் மறந்து, புனித ஜார்ஜ் கோட்டையில் அமர்ந்திருப்பதாலேயே தாங்கள் புனிதர்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் பொய் வேடம் போட நினைத்தால் அது புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போலாகும்! சில தினங்களுக்கு முன்பு கூட முறைகேடுகளுக்காக பாரத் நெட் டெண்டரை மத்திய அரசே நிறுத்தி வைத்துள்ளதே, அதுவும் அதிமுக ஆட்சி டெண்டர்தான்!

அதுவும் அமைச்சர் ஜெயக்குமார் சொல்வது போல் ஊழல் அதிமுக அரசின் தொழில்நுட்பக் குழு வடிவமைத்த டெண்டர்தான்! - ஏன், ஜெயக்குமார் இப்போது இதயதெய்வமாக வணங்கி, வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் அந்த டெண்டருக்கு மத்திய அரசு தடை போட்டிருக்கிறது!

DMK Treasurer duraimurugan slams minister jayakumar

தன் மகனின் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு உதவி செய்ய ஒரு துணை முதல்வர் தனது துறையைப் பயன்படுத்தியிருக்கிறாரே, அதுவும் அதிமுக ஆட்சியில்தான்! இப்படி இன்னும் பல உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போக முடியும். திமுக தலைவர் எழுப்பிய தஞ்சாவூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பு டெண்டர் முறைகேடுகளைப் பொறுத்தமட்டில், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் அனைத்து முறைகேடுகளும் தெளிவாக உள்ளன். எப்போதும் ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் திறமையை கருணாநிதியிடம் இரவலாகப் பெற்றவர் திமுக தலைவர்.

அமைச்சர் ஜெயக்குமாருக்குத் தேவை என்றால் ஒரு பூதக்கண்ணாடி வாங்கி ஊரடங்கு முடிந்தவுடன் பார்சலில் அனுப்பி வைக்கிறேன். அதை மாட்டிக் கொண்டு அந்த 500 முதல் 700 கோடி ரூபாய் வரை அதிக மதிப்பீடு போட்டது, 32 ஒப்பந்ததாரர்கள் பங்கேற்பதை சிலருக்கே வழங்க முயல்வது, டெண்டர் தகுதிகளை ஒருதலைப்பட்சமாக நிர்ணயித்தது, அரசு ஆணைக்கும், டெண்டர் ஆணைக்கும் இடையே உள்ள மதிப்பு வேறுபாடு எல்லாம் உள்ள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அந்த 'அபிடவிட்'டை (affidavit) படித்துப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்; தன்னைத் தகவல்ரீதியாக வளர்த்துக் கொள்ளலாம்!

உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணத்தில் உள்ள தகவல்களையே ஒரு அமைச்சர் மறுக்கிறார் என்றால் ஊழல் ஆணவமும், அமைச்சர் என்ற அதிகார வெறியும் தலைக்கேறிவிட்டது என்றுதான் அர்த்தம். எல்லாத் துறைக்கும் வக்காலத்து வாங்கும் வேலையை மட்டுமே செய்து கொண்டு ஓர் அமைச்சர் தமிழக அமைச்சரவையில் இருப்பது வெட்கக் கேடானது!

DMK Treasurer duraimurugan slams minister jayakumar

இந்த நேரத்தில் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நான் ஒரேயொரு சவால் விடுகிறேன். அதிமுக ஆட்சியில் விடப்பட்ட பராமரிப்பு டெண்டர்கள், இந்த தஞ்சாவூர் டெண்டர் எல்லாவற்றையும் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்துங்கள். வேறு ஒரு துறைக்கு பதில் கொடுக்கும் அதிகாரம் உங்களுக்கு இருப்பதால் இப்படியொரு ஆணை பிறப்பிக்கும் அதிகாரத்தையும் நீங்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். நெடுஞ்சாலைத்துறை டெண்டர்கள் எதிலும் முறைகேடுகள் நடக்கவில்லை என்று அறிக்கை விடுவது போல், சிபிஐ முன்பும் விசாரணைக்கு ஆஜராகி பதில் சொல்லலாம். அந்த தைரியம் அமைச்சர் ஜெயக்குமாருக்கு இருக்கிறதா?

தனக்குச் சம்பந்தமில்லாத துறையின் முறைகேடு குறித்து அறிக்கை விடும் அமைச்சர் ஜெயக்குமாருக்கும், இந்த முறைகேடுகளுக்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை முதல்வரின் நெடுஞ்சாலைத்துறையை திரைமறைவில் அமைச்சர் ஜெயக்குமார் கவனித்துக் கொள்கிறாரா? அதைவிட, ஆதாயம் இல்லாமல் ஆற்றைக் கட்டி இறைக்க மாட்டார்கள் என்பார்கள். இப்படி ஊழல் குற்றச்சாட்டுகளை மூடி மறைத்து அறிக்கை விடுவதற்கு அமைச்சர் ஜெயக்குமாருக்கு என்ன ஆதாயம்? என்று கேட்கத்தான் தோன்றுகிறது. ஆனால், நாகரிகம் கருதி அதுபோன்ற கேள்வியை நான் அமைச்சரைப் பார்த்துக் கேட்க விரும்பவில்லை.

DMK Treasurer duraimurugan slams minister jayakumar

அதிமுக ஆட்சிக்கு வந்து ஒன்பது வருடங்கள் நெருங்கி விட்டன. அதிலும் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, குறிப்பாக, தர்மயுத்தத்திற்கு முன்பான முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆட்சி, கூவத்தூருக்குப் பிறகான முதல்வர் பழனிசாமி தலைமையிலான இந்த ஆட்சி எல்லாவற்றிலும் அரங்கேறியுள்ள ஊழல்கள் ஒன்றல்ல இரண்டல்ல; மலை போல் குவிந்து கிடக்கிறது! அப்படியொரு ஊழல் மலையில் அமர்ந்து ஒய்யாரமாக ஆட்சி நடத்தும் முதல்வருக்கோ, அமைச்சர் ஜெயக்குமாருக்கோ மக்களின் நலனுக்காக ஆட்சி செய்த திமுக மீதும் மக்கள் பணியே என் பணி என்று கொரோனா நேரத்திலும் இரவு பகலாக செயலாற்றிக் கொண்டிருக்கும் திமுக தலைவர் மீதும் ஒரு சுண்டுவிரலை நீட்டக் கூட தகுதி இல்லை. இப்போதைய அதிமுக ஆட்சியும் ஊழலும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்பதை அமைச்சர் ஜெயக்குமார் நினைவில் கொண்டு நாவடக்கத்துடன் பேட்டி கொடுப்பதும் கை அடக்கத்துடன் அறிக்கை எழுதுவதும் நல்லது என்று எச்சரிக்க விரும்புகிறேன்" என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios