கோபேக் மோடி விளம்பரத்தை தி.மு.க., வினர் அழிக்கவில்லை என்றால் அதனை பா.ஜ.கவினர் அழிப்பார்கள்' என அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை, எம்.எல்.ஏ செந்தில்பாலாஜிக்கு கடும் எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில் அந்த விளம்பரம் அழிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 10ம் தேதி கரூர், திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகில் சேலம்- மதுரை புறவழிச்சாலை மேம்பால சுவற்றில் 'கோ பேக் மோடி' என தி.மு.க. சார்பில் விளம்பரம் எழுதப்பட்டது. பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இதுகுறித்து நவம்பர் 11ம் தேதி மாவட்ட பா.ஜ.க தலைவர் சிவசாமி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதுகுறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நவம்பர் 16ம் தேதி அரவக்குறிச்சி அருகே தடாகோவில் பகுதியில் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் பா.ஜ.க.,வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது பேசிய பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை, 'கோ பேக் மோடி' என எழுதிய விளம்பரங்களை நவம்பர் 24ம் தேதிக்குள் தி.மு.க., வினர் அழிக்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் சென்று அழிப்போம். அதில் 'ஐந்து கட்சி அமாவாசை' 'சுடலை ராஜா' என்றும் எழுதுவோம். பிரதமர் மோடிக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கவில்லை என்றால் கரூரில் அரசியல் செய்ய முடியாது. நேர்மையாக அரசியல் செய்ய வாங்க' என்று தி.மு.க. மாவட்ட பொறுப்பாளரும் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.வுமான செந்திபாலாஜிக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இதுவரை உள்ளூர் அரசியல் பற்றி பேசாமல் இருந்த அண்ணாமலை தி.மு.க. வையும் செந்தில்பாலாஜியை குறி வைத்து பேச தொடங்கியுள்ளார். இந்நிலையில் 'கோ பேக் மோடி' என்ற சுவர் விளம்பரங்களை தி.மு.க.வினர் அழித்து விட்டனர். இதனால் இந்த பிரச்னைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.