திமுக கூட்டணியில் காங்கிரஸ், இ.யூ. முஸ்லீம் லீக் கட்சியுடன் தொகுதி உடன்பாடு முடிந்தவிட்ட நிலையில், எஞ்சிய கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளை திமுக ஒதுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

திமுக கூட்டணியில் பழைய கஸ்டமர்களான காங்கிரஸ், இ.யூ.முஸ்லீம் லீக் கட்சிகள் மட்டுமே இருக்கின்றன என்று ஒரு சில மாதங்களுக்கு முன்பு திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியிருந்தார். அவர் சொன்னதுபோலவே அந்தக் கட்சிகளுடன் காதும் காதும் வைத்தாற்போல தொகுதி உடன்பாட்டை திமுக முடித்துவிட்டது. இதே கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக, மமக, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீட்டுக் குழு முதல் கட்டப் பேச்சுவார்த்தையை நிறைவு செய்திருக்கிறது.

காங்கிரஸ், இ.யூ.முஸ்லீம் கட்சிகளுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கிவிட்ட நிலையில், இன்னும் 29 தொகுதிகள் மட்டுமே திமுக வசம் உள்ளன. தொடக்கம் முதலே நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 25 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற கருத்து திமுக தலைவர்கள் மத்தியில் இருந்துவந்தது. ஆனால், காங்கிரஸூக்கு 10 தொகுதிகளை ஒதுக்கிவிட்டதால், திமுக 25 தொகுதிகளில் போட்டியிட முடியுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

2004-ம் ஆண்டில் திமுக கூட்டணியில் இடம் பிடித்திருந்த காங்கிரஸுக்கு 10 தொகுதிகளை திமுக ஒதுக்கியது. அப்போது இதே கூட்டணியில் இடம் பிடித்திருந்த மதிமுக 4 தொகுதிகளிலும், சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் தலா 2 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இந்த முறையும் இந்தக் கட்சிகள் இதே அளவில் தொகுதிகளை எதிர்பார்க்கின்றன. இந்த முறை 7 தொகுதிகளின் பட்டியலை கொடுத்து 4  தொகுதிகளை திமுகவிடம் மதிமுக எதிர்பார்க்கிறது.

இதேபோல அகில இந்திய கட்சிகளான சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகள் தலா 5 தொகுதிகளின் பட்டியலை கொடுத்து தலா 2 தொகுதிகள் கண்டிப்பாக வேண்டும் என்று கேட்டுள்ளன. இந்தக் கட்சிகள் போக 2009, 2014-ம் ஆண்டுகளில் இரண்டு தொகுதிகளை ஒதுக்கியதுபோல இந்த முறை விசிகவுக்கு 2 தொகுதிகளை கேட்டுவருகின்றன. இந்தக் கட்சி 3 தொகுதிகளின் பட்டியலை கொடுத்திருக்கிறது.

முதல் கட்டப் பேச்சுவார்த்தையில் எத்தனை தொகுதிகள் வேண்டும்; எந்தெந்த தொகுதிகள் வேண்டும் என்ற அளவில் மட்டுமே பேச்சுவார்த்தை இருந்ததாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்தப் பட்டியலை வாங்கி வைத்துக்கொண்ட திமுக தொகுதி பங்கீட்டுக் குழு, ஸ்டாலினிடம் பேசிவிட்டு தெரிவித்திருப்பதாக கூறியுள்ளது. இந்தக் கட்சிகளுக்கு முன்பே தீர்மானித்ததுபோல ஓரிறு தொகுதிகளை திமுக ஒதுக்குமா அல்லது அவர்களுக்கு கெளரவமான தொகுதிகளை ஒதுக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

தொகுதி பங்கீட்டில் கறார் காட்டும் என எதிர்பார்க்கபப்ட்ட திமுக, காங்கிரஸுக்கு கெளரவமான தொகுதிகளை வழங்கியிருப்பதால், இந்தக் கட்சிகளுக்கும் அதேபோல கெளரவமான தொகுதிகளை ஒதுக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. 

அதிமுக-பாமக-பாஜக கூட்டணி அமைந்த பிறகு திமுகவின் அணுகுமுறையிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் இந்தக் கூட்டணியில் தேமுதிக இடம்பெறவும் அதிமுக காய் நகர்த்திவருகிறது. அப்படி அமையும் கூட்டணி பலமான கட்சிகள் அடங்கிய கூட்டணி என்ற தோற்றத்தைத் தரும் என்பதால், திமுக கூட்டணி கட்சிகளிடம் கறாராக பேச முடியாத நிலைக்கு அக்கட்சி தள்ளப்பட்டிருக்கிறது.

குறைந்த தொகுதிகளை திமுக கூட்டணி கட்சிகள் ஏற்காமல்போனால், திமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைத்து அந்தக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கும் நிலை ஏற்படும். கடந்த 2004-ல் திமுக-காங்கிரஸ்-பாமக-மதிமுக-சிபிஎம்-சிபிஐ ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி அமைந்தபோது 16 தொகுதிகளில் மட்டுமே திமுக போட்டியிட்டது. 2009-ல் திமுக-காங்கிரஸ்-விசிக என மூன்று கட்சிகள் அடங்கிய கூட்டணி மட்டுமே அமைந்த நிலையில் 23 தொகுதிகளில்தான் திமுக போட்டியிட்டது.

அதிமுகவால் கூட்டணியின் முக்கியத்துவம் திமுகவுக்கு கூடியுள்ள நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு கெளரவமான தொகுதிகளை ஒதுக்கும் என்றே அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள். தற்போது உள்ள 29 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு அதிகபட்சமாக 8 தொகுதிகளை ஒதுக்கும் என்றும் அறிவாலய வட்டாரத்தில் பேசப்படுகிறது. எனவே முன்பு திட்டமிட்டதுபோல 25 தொகுதிகளில் திமுக போட்டியிடும் நிலை இருக்காது. இன்னும் மூன்று நாட்களுக்கு சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் இருக்கமாட்டார் என்பதால், திங்கள்கிழமைக்கு பிறகு இந்தக் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்து இறுது முடிவு ஏற்படும் என்பதே தற்போதைய நிலை.