அதிமுக கூட்டணியில் இணைந்து மக்களவை தேர்தலை சந்திக்க உள்ள பாமகவை வீழ்த்த திமுக கூட்டணி அதிரடி திட்டங்களை வகுத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

அதிமுக கூட்டணியா? திமுக கூட்டணியா? என போங்கு காட்டி வந்த பாமக இறுதியாக அதிமுக கூட்டணியில் இணைந்து 7 மக்களவை தொகுதிகளையும், 1 ராஜ்யசபா சீட்டையும் பெற்றுள்ளது. வடமாவட்டங்களின் வன்னியர்கள் அதிகம் இருப்பதால் பாமக கூட்டணியை பெரிதும் நம்பி இருக்கிறது அதிமுக. இதனால்தான் தேசிய கட்சியான பாஜகவுக்கு இல்லாத முக்கியத்துவத்தை காட்டும்  வகையில் இரண்டு தொகுதிகளை அதிகமாக பாமகவுக்கு ஒதுக்கி உள்ளது அதிமுக.

வன்னியர் வாக்கு வங்கியை அதிமுக குறி வைத்துள்ளதை போல திமுகவும் வேறு வகையில் மொத்தமாக வளைக்க திட்டமிட்டு அதற்கான வேலைகளில் தீவிரம் காட்டத் தொடங்கி இருக்கிறது. தமிழகம் புதுவையில் உள்ள 40 தொகுதிகளில் வடமாவட்டங்களில், 18 எம்.பி., தொகுதிகளில் பரவலாக வன்னியர் இனத்தை சார்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

 

ஆகையால், பாமகவை எதிர்கொள்ள இந்த 18 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில், திமுக சார்பில் வன்னியர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களையே வேட்பாளர்களாக நிறுத்த திமுக முடிவு செய்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன. அதேபோல் தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமுதாயத்தை சார்ந்தவர்களை வேட்பாளர்களாக அறிவிக்கவும் முடிவெடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.