துக்கத்திலும்  மது விருந்தை ஆர்ப்பாட்டமாக திமுக உடன்பிறப்புகள் நடத்தி இருப்பது அதிர்ச்சியளித்துள்ளது. 

அ.தி.மு.க., ஆட்சி நடந்தாலும், சேலம் மாவட்ட 'டாஸ்மாக்'கில் தி.மு.க., தொழிற்சங்கமான, தொ.மு.ச., நிர்வாகிகளின் கை தான் ஓங்கியிருக்கிறது. எந்த அதிகாரிகள் வந்தாலும், சரியாக கட்டிங் வசூலித்து கொடுத்து விடுகிறார்கள். இதனால், அங்கு திமுக கொடி தான் உயரே பறக்கிறது. தொ.மு.ச., நிர்வாகிகள் ஆண்டுதோறும் மார்ச் முதல் வாரம், சேலம் - அரூர் சாலையில் மஞ்சவாடி கணவாயை ஒட்டியிருக்கிற முனியப்பன் கோவிலில் கிடா விருந்து நடத்துவார்கள். 

இந்த விருந்தில், டாஸ்மாக் தொழிலாளிகள், அதிகாரிகள் என அனைவரும் கலந்து கொள்வார்கள்.  கடந்த வாரம் இந்த கிடா விருந்துக்காக, டாஸ்மாக் கடைகளுக்கு மது சப்ளை செய்கிற நிறுவனங்களிடம் இருந்து 'ஓசி'யில் மது பாட்டில்கள் வாங்கி இருக்கிறார்கள். அப்போது தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் இறந்து போய் விட்டதால், ஒரு வாரம் துக்கம் அனுசரிப்பதாக கட்சி தலைமை அறிவித்து இருந்தது.

 

இதனால், கிடா விருந்து நடக்குமா என சிலர் கேட்டிருந்தனர். அதற்காக 'துக்கத்தை மறக்க தானே, மது பாட்டில்களை வாங்கி அடுக்கியிருக்கோம்' என சொன்ன நிர்வாகிகள், வழக்கத்தை விட தடபுடலாக கிடா விருந்தை நடத்தி முடித்திருக்கிறார்கள்.