நாடாளுமன்றத் தேர்தலில் கரூர், நாமக்கல் ஆகிய தொகுதிகளில் திமுகவை வெற்றி பெற செய்வதற்கான முயற்சிகளை அண்மையில் திமுகவில் சேர்ந்த செந்தில் பாலாஜி முடுக்கிவிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினகரனின் அமமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. கொங்கு மண்டலத்தில் திமுக பலவீனமாக இருக்கும் நிலையில், அந்த மண்டலத்தில் வெற்றி பெற திமுக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் அந்த மண்டலத்தைச் சேர்ந்த செந்தில் பாலாஜியை திமுக அணுகி அக்கட்சியில் இணைய வைத்தது. 

பொதுவாக ஒருவர் ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சியில் இணையும்போது, சில உத்தரவாதங்கள் அளிக்கப்படுவது வாடிக்கை. ஆனால், அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது பற்றிகூட செந்தில் பாலாஜி எந்த உத்தரவாதத்தையும் பெறவில்லை என்றே கூறப்படுகிறது. செந்தில் பாலாஜியின் முழு கவனமும் நாடாளுமன்றத் தேர்தலில் தான் குவிந்திருக்கிறது என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். 

கரூர் எம்.பி.யும் மக்களவை சபாநாயகருமான தம்பிதுரை, கரூரில் செந்தில் பாலாஜிக்கு போட்டியாக வந்த அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் பாடம் புகட்ட வேண்டும் என்பதில் குறியாக உள்ள செந்தில் பாலாஜி, கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுகவை வெற்றி பெற வைப்பதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் உறுதி அளித்திருக்கிறார்.  

அண்மையில் கரூரில் செந்தில் பாலாஜி நடத்திய காட்டிய பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தால் ஸ்டாலினும் கரூர் தொகுதி பற்றி நேர்மறையாக எண்ணம் கொண்டிருப்பதாக உள்ளூர் திமுகவினர் சொல்கிறார்கள். கரூர் தொகுதி மட்டுமல்லாமல், அருகில் உள்ள நாமக்கல் தொகுதியிலும் திமுக வெற்றி பெறுவதற்கான பணிகளை செந்தில் பாலாஜி தொடங்கியிருப்பதாக திமுகவினர் தெரிவிக்கிறார்கள். அமைச்சர் தங்கமணிக்கு ‘தண்ணி’ காட்டும் முயற்சியாக நாமக்கல் தொகுதியிலும் அவரது பார்வை பதிந்திருக்கிறது என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.