80 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரரும், கலை, இலக்கியம், அரசியல் என பன்முகத் தன்மை கொண்ட கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மாநிலங்களவையில் திமுக எம்பி திருச்சி சிவா கோரிக்கை விடுத்துள்ளார். 

கலை, இலக்கியம், அரசியல் என பல துறைகளில் சிறந்து விளங்கியவர் கருணாநிதி. கருணாநிதி கடந்த 7ம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் கடந்த 8ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று பேசிய திமுக எம்பி திருச்சி சிவா, 80 ஆண்டுகால பொது வாழ்க்கையில் 50 ஆண்டுகள் திமுகவின் தலைவராக கருணாநிதி இருந்துள்ளார். அடித்தட்டு மக்களின் வாழ்க்கை மேம்பட உழைத்தவர் கருணாநிதி. மேலும் கலை, அரசியல், இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் சிறந்து விளங்கி பெரும் பங்காற்றியுள்ளார். எனவே கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று திருச்சி சிவா கேட்டுக்கொண்டார். 

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் எம்பிக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதே கோரிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.