மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 37 தொகுதிகளில் வென்ற திமுக எம்.பி.,கள் மத்திய அமைச்சரவையில் இடம்பெறாவிட்டாலும் நாடாளுமன்றத்தை கலக்கி வருகிறார்கள்.

கடந்த 18ம் தேதி பதவியேற்றுக்கொண்ட திமுக எம்.பிகள் அனைவரும் தமிழில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டு அசரடித்தனர். திமுகவில் இருந்து புதிதாக 13 இளம் எம்.பிகள் நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைத்துள்ளனர். தூத்துக்குடி எம்.பி கனிமொழி ராஜ்யசபா எம்.பியாக இருந்திருக்கிறார். ஆனால், மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. 
தர்மபுரி தொகுதி செந்தில் குமார், நெல்லை , ஞானதிரவியம், தென்காசி தனுஷ்குமார், கடலூர் டி.ஆர்.எஸ் ரமேஷ், தென்சென்னை தமிழச்சி தங்கபாண்டியன், சேலம் எஸ்.ஆர்.பார்த்திபன், வடசென்னை, கலாநிதி வீராசாமி, மயிலாடுதுறை- ராமலிங்க, காஞிபுரம் செல்வம், திருவண்ணாமலை சி.என்.அண்ணாதுரை,  கள்ளக் குறிச்சி கவுதமசிகாமணி, பொள்ளாச்சி சண்முகசுந்தரம் ஆகிய 13 பேரும் மக்களவைக்கு புதுமுகங்கள்.

 

இதனால், பதவியேற்றுக் கொண்டதும் அன்று தங்களது குடும்பங்களையும், சொந்தபந்தம், நண்பர்கள் என அனைவரையும் நாடாளுமன்றத்திற்கு வரவழைத்து வளாகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கவுதமசிகாமணி தனது தந்தை பொன்முடி, தாய், மனைவி, மைத்துனருடன் எம்.எல்.ஏ ர்களை அழைத்துச் சென்று நாடாளுமன்றத்தை கலக்கினார். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தங்கும் இடங்களுக்கு ஜீன்ஸ் பேண்ட், கலர்சட்டைகளில் இளம் எம்பிகள் கலக்க, மயிலாடுதுறை ராமலிங்கம் மட்டுமே வேஷ்டி சட்டையில் இருந்தார். இவர்களுக்கெல்லாம் இன்னும் ஒருபடி யூத்தாகி தென்காசி தொகுதி எம்.பி தனுஷ்குமார் ஃபேடு ஜீன்ஸ் போட்டு வந்து கலக்கினார்.

 

இந்த குரூப் போட்டோவில் கனிமொழியும், தமிழச்சி தங்கப்பாண்டியனும் கலர்புல் சேலையில் கலக்கினர். இந்தப் பட்டாளத்தில் சீனியர்களான டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், பழனிமாணிக்கம் ஆகியோர் மிஸ்ஸிங். அந்த உற்சாகத்திற்கு காரணம் முதல் முறையாக அவர்களுக்கு எம்பி என்கிற முறையில் தங்கும் அறை, லேப் டாப், கார் சாவி உள்ளிட்டவைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 

எஸ்.ஆர்.பார்த்திபன் தனது மனைவியுடன் வலம் வந்தார். தமிழச்சி தங்கபாண்டியனின் கணவர் சந்திரசேகர் மனைவிக்கு பக்கபலமாக ஒரு ஓரத்தில் இருந்து கவனித்துக் கொண்டார். ஜோதிமணி காங்கிரஸ் கட்சி எம்.பியாக இருந்தாலும் தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி ஆகியோருடன் ஒட்டிக் கொண்டு முத்தோழிகளாக நாடாளுமன்றத்துக்குள் வலம் வந்தனர்.

இதுவரை திமுக எம்பிகள் பலரும் வேஷ்டி- சட்டையுடன் சென்று வந்தனர். இதில் தயாநிதிமாறனை மட்டும் விதிவிலக்காக கொள்ளலாம். ஆனால், திமுக இளம் எம்பிகள் பேண்ட் கலர் சட்டையுடன் பெரும்பாலானோர் வலம் வருவது இதுவே முதல்முறை.