விக்கிரவாண்டி இடைத்தேர்தல் படுதோல்வி குறித்து திமுகவின் விசாரணைக் குழு நடத்திய விசாரணை அறிக்கை கட்சி தலைமையிடம் வழங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 நாடாளுமன்றத் தேர்தலில் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்ற திமுக, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் படுதோல்வி அடைந்தது. அதிமுக வேட்பாளரிடம் 44 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக தோல்வி அடைந்தது. இதனால், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் அதிருப்தி அடைந்தார். அதை எதிரொலிக்கும் வகையில் திமுக பொதுக்குழுவில் மு.க. ஸ்டாலின் பேசினார். தோல்வி குறித்து திறந்த மனதுடன் விவாதிக்கப்படும் எனவும் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். எதிர்வரும் தேர்தல்களை மனதில் வைத்து திமுக சில நடவடிக்கைகளை கட்சிக்குள் எடுக்க முடிவு செய்திருக்கிறது.


அதன் ஒரு பகுதியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து ஆராய ஒரு விசாரணை குழுவை விக்கிரவாண்டிக்கு திமுக தலைமை அனுப்பியிருந்தது.  அந்த விசாரணை அறிக்கை திமுக தலைமையிடம் வழங்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.  ஆனால், திமுகவில் கடந்த காலங்களிலும் தேர்தல் தோல்வி குறித்து ஆராய இதுப்போல பல்வேறு விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த அறிக்கையின் அடிப்படையில் பெரிதாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று திமுக தொண்டர்கள் அங்கலாய்க்கிறார்கள்.

 
விக்கிரவாண்டி விசாரணை குழு பற்றி அந்தத் தொகுதியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய அளவிலான திமுக நிர்வாகி ஒருவர் கூறும்போது, “விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தோல்விக்கான காரணக்களை எந்த அச்சமும் இன்றி தெரிவிக்கும்படி கமிட்டி உறுப்பினர்கள் கேட்டார்கள். சிலர் எழுத்துப்பூர்வமாக புகார்கள் தெரிவித்தார்கள். இன்னும் சிலர் வாக்காளர்களை ஆளும் தரப்பு விலைக்கு வாங்கியதாகவும் சொன்னார்கள். உண்மையில் திமுக தோல்வியடைந்த இடங்களில் எல்லாம் விசாரிக்க இதுபோல பல விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அதன் அறிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதில்லை. திமுக விசாரணை குழு என்பதே கண் துடைப்பு என்றே தொண்டர்கள் நினைக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.


ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்தபோதும் வார்டு லெவலில் உள்ள நிர்வாகிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாவட்ட அளவில் எந்த நிர்வாகியின் மீதும் கையைகூட வைக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.