பதவியேற்ற ஒரே மாதத்தில் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.டி.சேகர் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் திமுக சார்பில் ஆர்.டி.சேகர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், சென்னை, கொடுங்கையூர், காமராஜர் சாலையில் அலுவலகத்தில் இருந்த திமுக வட்டச் செயலாளரான சேகர் மற்றும் அவரது உறவினர்கள் சிலரை நேற்று மாலை ஒரு கும்பல் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததுடன், அலுவலகத்தில் இருந்த ஒரு லட்சம் ரூபாயையும் எடுத்துச் சென்று விட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறியுள்ளனர்.

எம்.எல்.ஏ., ஆர்.டி.சேகரின் தூண்டுதலின் பேரிலேயே அவர்கள் தாக்குதல் நடத்தியதாக பாதிக்கப்பட்ட வட்டச்செயலாளர் என்.டி.சேகர் குற்றம்சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக என்.டி.சேகர் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொடுங்கையூர் போலீசில் புகாரைப் பெற்றுக் கொள்ளவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.