திமுக ஆட்சி என்பது சுய உதவிக் குழுக்களின் பொற்கால ஆட்சி என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னையில் நடைபெற்றா மாநில வங்கியாளர்கள் குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகையில், “இச்சந்திப்பு மாநில வளர்ச்சியில் அரசாங்கத்துக்கும் வங்கிகளுக்கும் இடையிலான கூட்டுறவு உறவின் தொடக்கமாக இருக்கும் என நம்புகிறேன். அரசாங்கத்தின் கொள்கைகள், திட்டங்களைச் செயல்படுத்துவதில் வங்கிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இப்போது மாநிலத்தின் பொருளாதாரத்தில் முக்கியமான துறைகளுக்குக் கடன் வழங்குவதை அதிகரிக்கும் கட்டாயத்தில் இருக்கிறோம். பொருளாதாரம் புத்துயிர் பெறவும்; தொற்று நோய்களின்போது பல குடும்பங்கள் அனுபவித்த வருமான இழப்பை மாற்றவும் வேண்டிய ஒரு முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம்.
எனவே, அரசும் வங்கிகளும் இந்நேரத்தில் இணைந்து செயல்படுவது மிக முக்கியம். கிட்டத்தட்ட 20 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டியுடன் நாட்டிலேயே இரண்டாவது பெரிய மாநிலப் பொருளாதாரமாக தமிழ்நாடு உள்ளது. தமிழக அரசு பல முக்கிய நலத்திட்டங்கள், மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இது மாநில வளர்ச்சிக்கு மட்டுமல்ல, மக்களின் வளர்ச்சிக்கும் நலிந்த பிரிவினரின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தியுள்ளது. 
கொரோனா காலத்துப் பின்னடைவுகளைப் பட்டியலிட்டால் அது மிக நீளமாக் இருக்கும். ஆனால், அதே சமயத்தில் அது பல நன்மைகளை மறைமுகமாகச் செய்துள்ளது. ஊரடங்கு காலம் தவிர்க்க முடியாதது. ஊரடங்கு அறிவித்தால் மட்டுமே கொரோனா பரவும் சங்கிலியை உடைக்க முடியும். அது ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கவும். எனவேதான், மக்களுக்கு ரூ.4 ஆயிரம் ரூபாய் வழங்கினோம். 14 வகையான மளிகைப் பொருட்களை வழங்கினோம். பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு போன்றவை நிதிச் சுமைக்கு இடையேதான் வழங்கினோம். இதற்கு ஒரே காரணம், மக்களைக் காக்க வேண்டும் என்பதுதான். நேற்றும், இன்றும், நாளையும் திமுக அரசின் ஒரே நோக்கம் இதுவாகத்தான் ஒன்றுதான். இந்த நோக்கத்துக்கு வங்கிகளும் உதவ வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்!


திமுக ஆட்சி என்பது சுய உதவிக் குழுக்களின் பொற்கால ஆட்சி. சுயஉதவிக் குழு இயக்கம் தமிழகத்தில் 1989-90ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது அதற்கு தனிக் கவனம் செலுத்தினேன். அடுத்துவந்த ஆட்சியாளர்களால் அது திறம்பட நடத்தப்படவில்லை. சமூக மறுமலர்ச்சிக்குக் குறிப்பாகப் பெண்களின் உயர்வுக்கு இது மிக மிக முக்கியமான திட்டம் ஆகும்” என்று ஸ்டாலின் பேசினார்.