காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் விதித்த கெடு கடந்த 29ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. அதேநேரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து திமுக சார்பில் கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் நேற்று ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, வரும் 5ம் தேதி முழுஅடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் நடைபெறும் எனவும் எந்த மாதிரியான போராட்டங்கள் என அறிவிக்கப்படாது எனவும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

நேற்று கூட்டம் முடிந்தவுடன், திடீரென திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. அதில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் கலந்துகொண்டு கைதாகினர்.

இந்நிலையில், இன்று தமிழகம் முழுவதும் பல இடங்களில் மறியல் போராட்டம் நடந்து வருகிறது. சென்னை சைதாப்பேட்டையில், மா.சுப்பிரமணியம் தலைமையில் ஏராளமான திமுகவினர், சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

அதேபோல கோவையிலும் திமுக சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.