’இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், பேராயர் எஸ்றா சற்குணம் ஆகியோரின் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால், அதற்கு முழு பொறுப்பு பாமக நிறுவனர் ராமதாஸ்தான்’ என திமுக எச்சரித்துள்ளது.

பொன்பரப்பி விவகாரத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாகச் சாடி, பாமக தலைவர் ஜி.கே.மணி அறிக்கை விடுத்திருந்தார். அந்த அறிக்கைக்கு, திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலியில் பதிலளிக்கப்பட்டுள்ளது. 

அதில், ’’திமுகவில் பொருளாளர் துரைமுருகன் மட்டுமே விவரம் அறிந்தவர் என்று ஜி.கே.மணி தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார். ஆனால், திமுகவில் இருப்பவர்கள் அனைவருமே விவரம் அறிந்தவர்கள்தான். அடிப்பொடியான ஜி.கே.மணி சிண்டு முடியும் வேலையை மணி பார்க்க வேண்டாம். எந்த விவரமும் அறிந்துகொள்ளாமல் ஸ்டாலின் திமுகவுக்கு தலைவர் ஆகிவிடவில்லை.

அவர் ஒட்டுமொத்த தமிழர்களின் தலைவர். ஒரு நூற்றாண்டு இயக்கத்தின் அரசியல் பிரிவான திமுகவின் தலைவர் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? அவர் செய்த தவறு என்ன? பொது விவாதத்திற்கு அழைப்பதும் வாய்துடுக்காக பேசுவதும், அறிக்கை வெளியிடுவதும் கொலை மிரட்டல் விடுப்பதும், அதற்கெல்லாம் காரணம் நாங்கள் இல்லை என்பதும், பிறகு கற்பனையான கதைஜ்களை கட்டி விடுவதும் ராமதாஸ் அண்டு கம்பெனியின் முக்கிய பணிகளாக இருந்து வருகின்றன. 

திமுக சாதி கட்சி இல்லை என்றும் குறிப்பிட்டுள்ள முரசொலி அறிக்கை, கற்பனையான கதைகளை பரப்புவது ராமதாசின் தொடர் பணியாக இருக்கிறது. முத்தரசன், எஸ்றா சற்குணம் உள்ளிட்ட திமுக அணியைச் சேர்ந்த தலைவர்களின் உயிருக்கு ஆபத்து நேருமானால் அதற்கு முழு பொறுப்பு ராமதாஸ் தான்’’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.