Asianet News TamilAsianet News Tamil

பரபரப்பான அரசியல் சூழலில் ஸ்டாலின் எடுத்த அதிரடி தீர்மானம் இதுதான்!

DMK Resolution against 18 MLA disqualified
DMK Resolution against 18 MLA disqualified
Author
First Published Sep 19, 2017, 6:15 PM IST


திமுக செயல் தலைவரும் - தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மாலை 5.00மணிக்கு அண்ணா அறிவாலயம், கழக அலுவலகத்தில் நடைபெற்றது.


அதுபோது நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:-


தீர்மானம் : 1


அரசுவிழாக்களை அரசியல் மேடையாக்கும் குதிரை பேர அரசுக்கும் தலைமைச்செயலாளர்-காவல்துறை தலைவர் ஆகியோருக்கும் கண்டனம்.


மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா என்ற பெயரில்  மாநிலம் முழுவதும் அரசு பணத்தை செலவழித்து, தலைமை செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பெயரில் அழைப்பிதழ் அச்சடித்து ‘குதிரை பேர’ அதிமுக அரசின் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமியும்,துணை முதல்வர்  திரு.ஓ.பன்னீர்செல்வமும் அரசு விழாக்களை திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சிக்கும் கட்சி கூட்டங்களாக மாற்றி வருவதற்கு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.


உள்கட்சி விவகாரத்தில் தரம் தாழ்ந்த விமர்சனங்களை எடுத்து வைக்கவும், தி.மு.க.வை அநாகரிகமாக விமர்சிப்பதற்கும் “அரசு விழாக்களை" பயன்படுத்தி இந்த குதிரை பேர அதிமுக அரசு மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்து வருகிறது. அதிமுகவின் கட்சி பணத்தில் கூட்டம் போட்டு பேச வேண்டியவற்றை எல்லாம் அரசாங்க பணத்தில் கூட்டம் போட்டு பேசி வருகிறது. இது போன்ற “அரசியல்மயமான அரசு விழாக்கள்" நடத்துவதற்கு நிதிஒதுக்கீடு செய்யும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் “அரசு பணத்தை வீணடித்தற்கு" விளக்கம் அளிக்க வேண்டிய நிலை கட்டாயம் வரும் என்று இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் எச்சரிக்க விரும்புகிறது.


இது ஒருபுறமிருக்க “குட்காவை கண்டுபிடிங்கள்” என்றால், அதனை விடுத்து “குதிரை பேரம்” செய்ய கர்நாட மாநிலத்திற்கு போலீஸை அனுப்பி உள்கட்சி பகைமையைத் தீர்த்துக் கொள்ள காவல் துறையைப் பயன்படுத்துகிறது இந்த அரசு.  சட்டம்-ஒழுங்கு பணிகளில் அக்கறை காட்டாத தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை டி.ஜி.பி.யாக இருக்கும் திரு டி.கே.ராஜேந்திரன், அதிமுகவின் “தனி பாதுகாப்பு அதிகாரி” போல் செயல்படுவதை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.


 பிரகாஷ் சிங் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த “இரண்டு வருட பணிக்கால பாதுகாப்பு" அடிப்படையில் டி.ஜி.பி.யாகி, அந்த பணி பாதுகாப்பை ஒரு கட்சி அரசியலுக்கு டி.ஜி.பி. பயன்படுத்துகிறார் என்பதை இக்கூட்டம்  சுட்டிக்காட்ட விரும்புகிறது.தமிழகத்தில் எங்குபார்த்தாலும் கொலை,கொள்ளைகள் நடக்கின்றன. பெண்களின் பாதுகாப்பிற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.  மாவட்ட ஆட்சி தலைவரின் உயிருக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலை இந்த ஆட்சியில் ஏற்பட்டுள்ள நிலையில் “ஸ்காட்லான்டு யார்டுக்கு இணையானது” என்று புகழ் பெற்ற தமிழக காவல்துறையை அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களுக்கு முழுமையாக பயன்படுத்துவது காவல்துறை தலைவருக்கு அழகல்ல.  ஆகவே காவல்துறை தலைவர் திரு டி.கே.ராஜேந்திரன் அவர்களும், தலைமை செயலாளர் திருமதி கிரிஜா வைத்தியநாதன் அவர்களும் “குதிரைபேர” அதிமுக அரசின் “உள்கட்சி விவகாரங்களில்” இருந்து தங்களை முற்றிலுமாக விடுவித்துக் கொண்டு,மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காப்பாற்றவும்,மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும் கடமையாற்ற வேண்டும் என்பதை  இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நினைவுபடுத்த விரும்புகிறது.


தீர்மானம் : 2


ஆளுநர் - முதல்வர் - சபாநாயகரின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு கண்டனம்

பத்தொன்பது சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி திரு.பழனிச்சாமி அரசுக்கு அளித்த ஆதரவை 22.8.2017 அன்று மாண்புமிகு தமிழக பொறுப்பு ஆளுநருக்கு அளித்த கடிதத்தில் திரும்பப் பெற்றவுடன்,முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிச்சாமி அரசு அன்றைய தினமே பெரும்பான்மையை இழந்து விட்டது.


233 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள தமிழக சட்டமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் எண்ணிக்கை 98ஆகவும், முதல்வருக்கான ஆதரவை வாபஸ் பெற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை21ஆகவும் உயர்ந்த நிலையில், குதிரை பேர அரசுக்கு எதிராக 119 சட்டமன்ற உறுப்பினர்களும்,ஆதரவாக 114 சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கும் நிலை ஏற்பட்டது. ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க தேவையான 117 சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து  திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 22.8.2017, 26.8.2017 மற்றும்10.9.2017 ஆகிய தேதிகளில் பொறுப்பு ஆளுநர் அவர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. மேதகு குடியரசுத் தலைவர் அவர்களிடமும் 31-8-2017ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சட்டமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களையும் அழைத்துச் சென்று ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து “உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்றத்தை கூட்ட வேண்டும்” என்று வலியுறுத்தி, இது தொடர்பாக ஆளுநர்அவர்களை சந்திப்பது கடைசி முறை என்றும் தெளிவுபடுத்தினார். ஆனாலும், அரசியல் சட்டத்தை காப்பாற்ற வேண்டிய ஆளுநர் அவர்களே சட்டமன்றத்தில் பலத்தை நிரூபிக்க உத்தரவிடாமல் பெரும்பான்மையை இழந்த அரசை 28 நாட்கள் பதவியில் தொடர அனுமதித்து தமிழகத்தில் நிலையற்ற அரசு தொடரும் சூழ்நிலையை  உருவாக்கியது  தமிழக  அரசியலில்  ஒரு  கருப்பு அத்தியாயம் என்று இந்த கூட்டம் பதிவு செய்கிறது.


இந்நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் “சட்டமன்ற வாக்கெடுப்பு” கோரியிருக்கும் நிலையில், குறிப்பாக அந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நாளை (20.9.2017) நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில்,அவசர அவசரமாக ஒரே நாளில் 18 சட்டமன்ற உறுப்பினர்களை கட்சி தாவல் தடைச் சட்டத்தின்படி ‘தகுதி நீக்கம்’ செய்து, அன்றைய தினமே அரசிதழில் வெளியிடப் பட்டுள்ளது ஆட்சியை ஜனநாயக விரோதமாக காப்பாற்றுவதற்கே தவிர, கட்சி தாவல் தடைச் சட்டத்தின் உண்மையான நோக்கத்தை  நிறைவேற்றுவதற்கு  இல்லை  என்பதால்  ஆட்சிக்கு முட்டுக் கொடுத்து நிறுத்தும் சபாநாயகரின் இந்த எதேச்சதிகார அதிகார துஷ்பிரயோகத்திற்கு  இந்த கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.


தமிழக சட்டமன்ற சபாநாயகர் திரு தனபால் அவர்களும், முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமி ஒரு புறமும், மாண்புமிகு ஆளுநர் அவர்களும், முதலமைச்சரும் இன்னொரு பக்கமும் கூட்டணி அமைத்து இழந்துவிட்ட பெரும்பான்மையை மீட்க குறுக்கு வழியில் அரசியல் சட்டத்தையும், கட்சி தாவல் தடைச் சட்டத்தையும் பயன்படுத்தியிருப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் உயிரோட்டத்தை நிறுத்தி,ஜனநாயக நெறிமுறைகளை வேரறுக்கும் செயல் என்று இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வேதனையுடன் கருதுகிறது.


மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டபோது, அவரது சட்டமன்ற தொகுதி காலியானது பற்றி அறிவிக்கும் அரசிதழை வெளியிட ஏறக்குறைய 43 நாட்கள் எடுத்துக் கொண்ட சபாநாயகர்


இந்த 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கத்தை உடனே அரசிதழில் வெளியிட்டிருப்பது உள்நோக்கம் நிறைந்தது மட்டுமல்ல, கட்சித் தாவல் தடைச் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்து, அரசியல் சட்டத்தின்படியான பெரும்பான்மையை குறுக்கு வழியில் அடைவதற்கு முதலமைச்சருக்கு துணை போயிருக்கிறார் என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, அதிமுக அமைச்சரவையின் ஊழல்களையும், ஜனநாயக விரோத, அரசியல் சட்ட விரோத நடவடிக்கைகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசும், மத்திய அரசின் விருப்பப்படி “மைனாரிட்டியை” மெஜாரிட்டி  ஆக்க திரு. எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு துணை போயிருக்கும்  தமிழக பொறுப்பு ஆளுநரும் தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துவதோடு,  நடுநிலை தவறி விட்ட சபாநாயகர் திரு. தனபால் அவர்களும், “குதிரைபேரம்” மூலமும் “குறுக்கு வழியிலும்” ஊழல் ஆட்சியை  தக்க வைத்துக் கொள்ள துடிக்கும் முதலமைச்சர் எடப்பாடி திரு.பழனிசாமியும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து சட்டமன்ற மரபையும்,அரசியல் சட்டத்தின் புனிதத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.


தமிழக மக்களின் நலன்களையும்,தமிழக முன்னேற்றத்தையும்  தடுத்து ஆட்சியிலிருக்க துடிக்கும் இந்த ‘குதிரைபேர’அதிமுக அரசை வீழ்த்த சட்ட ரீதியாகவும்,ஜனநாயக ரீதியாகவும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து போராடும் என்பதை தெரிவித்துக் கொள்ளும் அதேநேரத்தில்,  கழகச் செயல் தலைவரும் - தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி  மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுக்கும் எந்த முடிவிற்கும் இக்கூட்டம் தனது முழு ஒப்புதலை அளிக்கிறது என்பதை தெரிவிப்பதோடு; “அரசியல் சட்டத்தை காப்போம். தமிழகத்தை மீட்போம்” என்று இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பதிவு செய்ய விரும்புகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios