Asianet News TamilAsianet News Tamil

முடிந்தால் பஞ்சமி நில ஆதாரத்தைக் கொடுங்கள்.. இல்லையென்றால் பகிரங்க மன்னிப்பு கேளுங்கள்... டாக்டர் ராமதாஸுக்கு திமுக காட்டமான பதிலடி!

எழுப்பப்பட்ட பிரச்னை முரசொலி இருக்கும் இடம், பஞ்சமி நிலமா அல்லவா என்பதுதானே தவிர, முரசொலி அலுவலகம் அங்கு வாடகைக்கு இருக்கிறதா, இல்லையா? என்பதல்ல. முரசொலி சார்பில் பட்டாவை வெளியிட்டது முரசொலி இயங்கும் இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்கவும், பொய்யையே தனது அரசியலுக்கு அஸ்திவாரமாக்கி, பொய்யிலே வாழ்ந்து வரும் மருத்துவர் ராமதாஸின் "பொய்" முகமூடியைக் கிழிப்பதற்காகவும்தான்.

DMK Reply to pmk founder Dr.Ramadoss on Murasoli issue
Author
Chennai, First Published Jan 30, 2020, 10:34 PM IST

முரசொலி அலுவலகம்  ‘பஞ்சமி நிலம்’ என்று சொன்ன குற்றச்சாட்டுக்கு முடிந்தால் ஆதாரத்தைக் கொடுங்கள். அப்படி முடியாவிட்டால் தோல்வியை ஒப்புக்கொண்டுஅபாண்டமாக பழி சுமத்தி விட்டோமே என்று பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டு பிராயச்சித்தம் தேடப் பாருங்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு திமுக பதிலடி கொடுத்துள்ளது.

DMK Reply to pmk founder Dr.Ramadoss on Murasoli issue
முரசொலி அலுவலக விவகாரத்தில் அமைதியாக இருந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இன்று போட்ட ஒரு ட்வீட் மூலம் மீண்டும் அந்த விவகாரத்தைக் கிளப்பியுள்ளார். ராமதாஸ் இன்றை ட்வீட்டர் பதிவில், “முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்குகிறதாமே.... அப்படியானால், அந்த பட்டா வெளியிட்டது, அரசியலில் இருந்து விலகத் தயாரா? என்று சவால் விட்டதெல்லாம்  வழக்கம் போல் வெற்றுச் சவடால் தானா?, அரசியல் உலகில் எவ்வளவோ பல்டிகள் அடிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை அனைத்திலும் ஆகச்சிறந்த பல்டி, முரசொலி நிலம் மீதான பழியைத் துடைப்போம் என்று வீர வசனம் பேசி விட்டு, இப்போது நாங்களே வாடகைக்கு தான் இருக்கிறோம் என்று சரண் அடைந்தது தான்?DMK Reply to pmk founder Dr.Ramadoss on Murasoli issue
முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில்தான் இயங்குகிறது என்பதாவது உண்மையா?  மூலப் பத்திரத்தைத்தான் வெளியிடவில்லை. குறைந்தபட்சம் வாடகை ஒப்பந்தத்தையாவது முரசொலி நிர்வாகம் வெளியிடுமா? கூடவே  சவால் விட்டவர் அரசியலில் இருந்து விலகுவாரா? அகில இந்தியாவில் மட்டுமல்ல.... ஈரேழு லோகத்திலும் வாடகைக் கட்டிடத்தில் இருந்து கொண்டு உரிமையாளர் சார்பில் அவதூறு வழக்குத் தொடர்ந்த ஒரே கம்பெனி.... நம்ம முரசொலி கம்பெனிதான். வெறும் கையால் முழம் போடுவதில் இவர்களை வெல்ல ஆளே  இல்லை போலிருக்கிறது!' என்று ராமதாஸ் சீண்டியிருந்தார்.
டாக்டர் ராமதாஸின் இந்தப் பதிவுக்கு திமுக பதிலடி கொடுத்திருக்கிறது. இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளரும் எம்.பி.யுமான டி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ட்விட்டரில் பாமக தலைவர் மருத்துவரய்யா டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பது, பந்தயம் கட்டி படுதோல்வி அடைந்தவரின் பரிதாபத்தை பிரதிபலிக்கிறது. பாட்டாளிகளுக்காக இயக்கம் என்று துவங்கி, வன்னியர் சங்க அறக்கட்டளையைத் தன் பெயருக்கே மாற்றிக் கொண்டதைப் போன்றது முரசொலி அலுவலக விவகாரம் என்று அய்யா “பகல் கனவு” கண்டுவிட்டார் என்று கருதுகிறேன்.

 DMK Reply to pmk founder Dr.Ramadoss on Murasoli issue
அதனால்தான் ‘பஞ்சமி நிலம்’ என்று வீண் பழி சுமத்தி முரசொலியின் மூலப்பத்திரம் கேட்டவருக்கு முரசொலி பஞ்சமி நிலம் இல்லை என்பதற்கு ஆதாரமாக அதற்குரிய பட்டாவை வெளியிட்டோம்; முணுமுணுப்பே இல்லாமல் சில வாரங்கள் அமைதி காத்தார். இப்போது ‘பழையபடி’ வாடகைக் கட்டிடம் என்று ஒரு புதிய ‘பல்லவி’யை தொடங்கி திமுக.வை வம்புக்கு இழுக்கிறார். முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறது என்ற குற்றச்சாட்டை மருத்துவர் ராமதாசால் நிரூபிக்க முடியவில்லை. அவரைத் தூண்டிவிட்ட பா.ஜ.கவாலும் நிரூபிக்க முடியவில்லை.
தேசிய எஸ்.சி-எஸ்.டி. ஆணையம் சார்பில் நடைபெற்ற விசாரணைகளிலும் புகாரளித்தவர்கள் புறமுதுகிட்டு, ‘காலஅவகாசம்’ கேட்டு கலைந்து சென்ற பிறகும் கூட, இத்தனை வருடங்களாக அரசியலில் இருக்கும் மருத்துவர் ராமதாஸ் தான் சொன்ன பொய்யை விழுங்கவும் முடியாமல், நிரூபிக்கவும் முடியாமல் தவிக்கிறார். மீண்டும் மீண்டும் ஏதாவது ஒருவகையில் திமுகவை சீண்டி, அதிமுகவின் ஊழல்களை திசைதிருப்ப இரவு பகலாகப் பணியாற்றுகிறாரோ என்று சந்தேகிக்கிறேன்.

DMK Reply to pmk founder Dr.Ramadoss on Murasoli issue
பஞ்சமி நிலத்திற்கான ஆதாரத்தை மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டிருந்தால் அவரது நேர்மையைப் பாராட்டியிருக்கலாம். இல்லையென்றால் தெரியாமல் தவறு செய்துவிட்டேன் என்று மன்னிப்புக் கேட்டிருந்தால் பெருந்தன்மையோடு விட்டிருக்கலாம். ஆனால், இரண்டும் இல்லாமல், நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை எதிர்கொள்ள வேண்டிய ராமாதாஸ், இப்போதும் கூட தனது தவறை உணருவதாகத் தெரியவில்லை என்றால், யாருக்காக இந்த நாடகத்தை அரங்கேற்றுகிறார்? திமுகவை விமர்சித்தால் பா.ஜ.க மகிழ்ச்சியடையும். தன் மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீதுள்ள மருத்துவக்கல்லூரி ஊழல் வழக்கு விசாரணை தடைபடும்; மத்திய அமைச்சரவையில் தன் மகன் இடம்பெற வாய்ப்பு ஏற்படும் என்ற நப்பாசை காரணமோ என்ற சந்தேகமே எழுந்திருக்கிறது.

DMK Reply to pmk founder Dr.Ramadoss on Murasoli issue
எங்கள் தலைவரைப் பொறுத்தமட்டில் “பஞ்சமி நிலம் என்பதை நிரூபிக்க தயாரா” என்று மருத்துவர் ராமதாசுக்கு விட்ட சவால் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. அவர் சார்பில் “தேசிய பட்டியலின- பழங்குடியின ஆணையம்”, “ நீதிமன்றம்” உள்பட எங்கெங்கு ஆதாரங்களைக் கொடுக்க வேண்டுமோ அங்கெல்லாம் ஆதாரங்களை நாங்கள் கொடுத்து விட்டோம். இனி, தான் சுமத்திய பொய்க் குற்றச்சாட்டிற்குப் பொறுப்பேற்று நிரூபிக்க வேண்டியது ராமதாஸ் கையில்தான் இருக்கிறது. அதை தட்டிக் கழித்து விட்டு, மீண்டும் “வாடகை கட்டிடம்” என்று கூறி அவர் ஏன் தன்னைத்தானே திட்டமிட்டு தரம் தாழ்த்திக் கொள்கிறார்? என்பது அவருக்கு மட்டுமே புரிந்த புதிர்.DMK Reply to pmk founder Dr.Ramadoss on Murasoli issue
எழுப்பப்பட்ட பிரச்னை முரசொலி இருக்கும் இடம், பஞ்சமி நிலமா அல்லவா என்பதுதானே தவிர, முரசொலி அலுவலகம் அங்கு வாடகைக்கு இருக்கிறதா, இல்லையா? என்பதல்ல. முரசொலி சார்பில் பட்டாவை வெளியிட்டது முரசொலி இயங்கும் இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்கவும், பொய்யையே தனது அரசியலுக்கு அஸ்திவாரமாக்கி, பொய்யிலே வாழ்ந்து வரும் மருத்துவர் ராமதாஸின் "பொய்" முகமூடியைக் கிழிப்பதற்காகவும்தான்.
பாவம்; தன் குற்றச்சாட்டு ஆதாரமற்று பல் இளிப்பதைக் கண்டு, ராமதாஸ் அந்தர்பல்டி அடித்துவிட்டு பிரச்னையைத் திசைதிருப்ப நினைக்கிறார். ஆதாயம் கிடைக்கும் என்றால், அந்தர்பல்டி; ஆகாச பல்டி எல்லாம் ராமதாஸ் அடித்துக் காட்டுவார் என்பதை நாடறியும். அதில் அவர் கில்லாடி என்பதற்கு, அரசியல் கட்சி ஆரம்பித்ததில் இருந்து அவர் அடித்துள்ள பல்டிகளையெல்லாம் பட்டியலிட ஏடு கொள்ளாது. முடிவாக சவடால் விடும் வேலைகளை திமுகவிடம் வைத்துக்கொள்வதை நிறுத்திவிட்டு, “பஞ்சமி நிலம்” என்று சொன்ன குற்றச்சாட்டிற்கு முடிந்தால் ஆதாரத்தைக் கொடுங்கள். அப்படி முடியாவிட்டால் தோல்வியை ஒப்புக்கொண்டு, சமூக நீதிக் குரலை தொடர்ந்து ஒலித்து வரும் முரசொலி நாளிதழ் பற்றி அபாண்டமாக பழி சுமத்தி விட்டோமே என்று பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டு பிராயச்சித்தம் தேடப் பாருங்கள்.” என்று டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios