மக்களவை தேர்தலிலும், 21 தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிட வரும் 25ம் தேதி முதல் விருப்ப மனு விநியோகிக்கப்படும் என திமுக அறிவித்துள்ளது. 

மக்களவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக  கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. ஆனால் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கைழுத்தானது. 

இதனை தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வரும் 25ம் தேதி விருப்ப மனு வழங்கப்பட உள்ளது. அதேபோல் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கும் விருப்ப மனு வழங்கப்பட உள்ளது. இந்த விண்ணப்பத்தை திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் மாலை 6 மணிக்குள் பெற்றுக்கொள்ளலாம். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வரும் மார்ச் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை கட்சி தலைமையகத்தில் ஒப்படைக்க வேண்டும். விருப்ப மனு விண்ணப்பப்படிவத்தை ரூ.10 ஆயிரம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். தோழமை கட்சி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளுக்கு விண்ணப்பித்தவர்களில் கட்டணம் திருப்பி வழங்கப்படும் என திமுக தலைமை தெரிவித்துள்ளது.