மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட உள்ள கனிமொழியிடம் திமுக தலைமை நேர்காணல் நடத்தி உள்ளது. இந்நிலையில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தூத்துக்குடியை குறிவைத்து களமிறங்க பின்னணின் என்ன? என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.
 மாநிலங்களவை உறுப்பினராக இருந்து எம்.பி பதவியை மட்டும் வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. ஆகையால், மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டால் கட்சியில் செல்வாக்கை நிலைநாட்ட முடியும் என நினைக்கிறார் கனிமொழி. மு.க.அழகிரி கட்சியை விட்டு விலக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் தென்மாவட்டங்களில் திமுகவின் செல்வாக்கை பலப்படுத்தும் நோக்கத்தில் தூத்துக்குடியை குறிவைத்திருக்கிறார் கனிமொழி என்கிறார்கள். 
 
அதுமட்டுமின்றி மக்களவை தேர்தலோடு 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அந்த 21 தொகுதிகளில் இரண்டு தொகுதிகள் தூத்துக்குடி மக்களவைக்குள் அடங்கி உள்ளன. ஓட்டப்பிடாரம் தனித்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்,சுந்தர்ராஜன், விளாத்திக்குளம் தொகுதியில் வெற்றி பெற்ற உமா மகேஸ்வரி ஆகிய இருவரும் டி.டி.வி.தினகரன் அணியை சேர்ந்தவர்கள். இந்த 21 தொகுதிகளையும் திமுக கைப்பற்றி விட்டால் 97 எம்.எல்.ஏக்களை வைத்துள்ள திமுக அணி, 118 எம்.எல்.ஏக்களுடன் பெரும்பான்மை பெற்று விடும். திமுக சார்பில் வி.ஐ.பி வேட்பாளராக கனிமொழி களம் இறங்குவதால் இரண்டு எம்.எல்.ஏ தொகுதிகளையும் கைப்பற்றி விட முடியும் என்று கணக்கு போட்டுள்ளார்களாம்.
 
எடப்பாடி ஆட்சிக்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களித்த விவகாரத்தில், ஓ. பன்னீர்ச்செல்வத்துடன் 10 எம்.எல்.ஏக்கள் பதவி நீக்கம் தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் உள்ளது. கட்சி கொறடாவுக்கு எதிராக வாக்களித்தார்கள் என்பதால் அவர்களின் பதவி கட்சிதாவல் சட்டப்படி பறிபோகும் நிலை உருவாகலாம் எனக் கூறப்படுகிறது. இந்த பதினோரு எம்.எல்.ஏக்களில் சண்முகநாதன், தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ. ஆவார்.
 
ஆக, மூன்று தொகுதிகளும் முக்கியம் என்பதால், கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிடுவது திமுகவுக்கு சாதகமாக அமையும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் தூத்துக்குடியை வென்று கனிமொழி மத்திய அமைச்சராகவும், அத்தொகுதியில் உள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளை வென்று மு.க.ஸ்டாலின் முதல்வராகவும் திட்டமிட்டே முத்துநகரத்தில் முத்துக்குளிக்க திட்டமிட்டுள்ளது.