அரசியல் காழ்ப்புணர்ச்சியை கைவிட்டுவிட்டு முறையாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பராமரிக்க தமிழக அரசு முன் வர வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டில் சென்னை கோட்டூர்புரத்தில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சென்றார். அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அவர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள நூலகங்கள், கலையரங்கத்துக்கு சென்று பார்வையிட்ட ஸ்டாலின், நூலகத்தில் உறுப்பினராகவும் தன்னைப் பதிவு செய்துகொண்டார். அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள குறைகளை அங்கே வந்தவர்களிடன் கேட்டறிந்தார். பின்னர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.


“பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு பிறந்த நாள் நினைவாக  கருணாநிதியால் 2010-ம் ஆண்டில் இந்த நூலகம் திறந்து வைக்கப்பட்டது. 2011-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சி மாறியதால் அண்ணா நூற்றாண்டு நூலகம் சீரழிக்கப்பட்டுவருகிறது.   திருமணம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்த வாடகைக்கு விடுகின்றனர். அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்க் எதிர்ப்பு தெரிவித்து லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் கையொப்பம் பெற்று ஆளுநரிடம் மனுவாக அளித்தோம்.


 பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. அதன் பிறகு நீதிமன்றத்தின் ஆணைப்படி அதிமுகவின் அக்கிரமப் போக்கு தடுத்து நிறுத்தப்பட்டது. உலகத்திலேயே அனைவராலும் போற்றப்படும் நூலகமாக அண்ணா நூற்றாண்டு நூலகம் விளங்கிவருகிறது. அந்த நூலகத்தில் நானும் உறுப்பினராக சேர்ந்துள்ளேன். இனியாவது அரசியல் காழ்ப்புணர்ச்சியை கைவிட்டுவிட்டு முறையாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பராமரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

 
2011-ல் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்ற ஜெயலலிதா உத்தரவுப் பிறப்பித்தார். இதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த நூலகத்தை மருத்துவமனையாக மாற்ற நீதிமன்றம் தடை விதித்ததால், நூலகம் தப்பியது நினைவுகூரத்தக்கது.