சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்தாலும், மக்கள் மன்றத்தில் அவர்களின் உள்ளத்தை ஆளும் கட்சியாக திமுகழகமே இருக்கிறது என்பதை நாடாளுமன்றத் தேர்தல் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரை மக்கள் அளித்த தீர்ப்புகளினால் உணர முடிகிறது. மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கேற்ப இந்தப் பேரிடர் காலத்திலும் நாம் செயல்பட்டு வருகிறோம். 

பிற மாநிலங்களைவிட கூடுதல் விலை கொடுத்துக் கருவிகளை வாங்கி, பேரிடர் காலத்திலும் ஊழலில் திளைக்கவே நினைக்கிறார்கள். ஆட்சி அவர்களிடம் சிக்கிக்கொண்டிருந்தாலும், மக்கள் நம்பியிருப்பதும் எதிர்பார்ப்பதும் நம்மிடம்தான் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில், “உலகை அச்சுறுத்தும் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து நாட்டைக் காப்பாற்றிட ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா குறித்த விழிப்புணர்வைச் சட்டமன்றம் தொடங்கி மக்கள் மன்றம் வரை ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறது திமுக. அதனை அலட்சியப்படுத்திய ஆளுந்தரப்பு, அதனை மறைத்திட, நம்மை நோக்கி அரசியல் செய்வதாகக் குற்றம்சாட்டி, நிலைமையைத் திசை திருப்பலாம் என நினைக்கிறது. அதற்கு சில பத்திரிகைகளும் துணை போகின்றன.
அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டச் சொன்னபோது அதனை அரசியல் என வர்ணித்தது, திமுகழகம் நடத்திய தோழமைக் கட்சிகள் கூட்டத்திற்கு தடை விதித்தது, கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தன்னார்வலர்களும் வழங்கும் உதவிகளுக்குத் தடை விதிக்க முயன்றது, அரசின் ‘அம்மா உணவகத்தை’ அ.தி.மு.க.,வினர் நடத்தும் கேண்டீன் போல மாற்றியிருப்பது என இந்தப் பேரிடர் நேரத்திலும் மக்கள் நலனை நினைக்காமல், மலிவான அரசியல் செய்வது யார் என்பதைத் தமிழகம் அறியும். ஊழல் வைரஸ் பீடித்துள்ள இந்த ஆட்சியாளர்களால் உண்மைகளை மூடி மறைக்க முடியாது என்பதை, ஒவ்வொரு நாளும் அதிகரித்துவரும் நோய்த்தொற்று அபாயம் உணர்த்திக் கொண்டிருக்கிறது.
21-4-2020 நிலவரப்படி புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்ட 76 பேருடன் மொத்த எண்ணிக்கை 1596 என உயர்ந்திருப்பது வேதனையளிக்கிறது. நோய்த் தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களே, அதனால் பாதிக்கப்பட்டு, உயிரிழக்க நேரிடுவதையும், அவர்களின் உடல்களை மயானத்தில் புதைக்கவோ எரிக்கவோ முடியாத அசாதாரண சூழல் நிலவுவதையும் இதயம் உள்ள எவரும் ஏற்க முடியாது. மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மைப்பணியாளர்கள் என மக்கள் நலன் காக்க அர்ப்பணித்துள்ளோருக்கு உரிய பாதுகாப்புக் கவசங்கள் வழங்கப்படவில்லை என்பதை நாம் மட்டுமல்ல, நாட்டு நலனில் அக்கறையுள்ள ஊடகத்தினரும் சுட்டிக்காட்டினர். தற்போது, ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் நோய்த்தொற்று பரவியுள்ள நிலையில், அரசாங்கம் விரைந்து கூடுதல் விவேகத்துடன் செயல்படவேண்டும்.
ஆனால், விரைவு பரிசோதனைக் கருவியே சரியாகச் செயல்படவில்லை என்ற செய்திகள் மேலும் கவலையடையச் செய்கின்றன. நாம் கவலைப்படுமளவுக்கு ஆட்சியாளர்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. பிற மாநிலங்களைவிட கூடுதல் விலை கொடுத்துக் கருவிகளை வாங்கி, பேரிடர் காலத்திலும் ஊழலில் திளைக்கவே நினைக்கிறார்கள். ஆட்சி அவர்களிடம் சிக்கிக்கொண்டிருந்தாலும், மக்கள் நம்பியிருப்பதும் எதிர்பார்ப்பதும் நம்மிடம்தான். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்தாலும், மக்கள் மன்றத்தில் அவர்களின் உள்ளத்தை ஆளும் கட்சியாக திமுகழகமே இருக்கிறது என்பதை நாடாளுமன்றத் தேர்தல் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரை மக்கள் அளித்த தீர்ப்புகளினால் உணர முடிகிறது. மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கேற்ப இந்தப் பேரிடர் காலத்திலும் நாம் செயல்பட்டு வருகிறோம்.


ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் தேர்தல் களத்தின் வெற்றி-தோல்விகளைக் கடந்து மக்களுடன் பயணிக்கும் ஜனநாயக இயக்கம் திமுக. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற பேரறிஞர் அண்ணாவின் கனவைத் தனது அயராத உழைப்பினாலும் ஆட்சித் திறத்தாலும் நிறைவேற்றிய தலைவர் கலைஞரின் வழியில் அவரது உடன்பிறப்புகளான நாம் இந்தப் பேரிடர் நேரத்தில் செயல்படுவோம். உங்களில் ஒருவனான நான் முன் நிற்கிறேன். உங்களோடு இணைந்து நிற்கிறேன். ஒருங்கிணைந்து செயல்படுவோம். உலகை அச்சுறுத்தும் பேரிடரை அறிவியலின் துணையுடனும் ஆக்கபூர்வமான செயல்களாலும் வென்று காட்டுவோம்!” என்று மடலில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.