குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அதிமுகவும், அதிமுக கூட்டணியில் உட்கார சீட் கிடைக்காமல் டயரில் பரிதாபமாகத் தொங்கிக் கொண்டு இருக்கும் பாமகவின் ஓர் உறுப்பினரும் ஆதரித்தனர் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.


சென்னை பெசன்ட் நகரில் நடந்த கோலப் போராட்டம் தொடர்பாகவும் அதனையடுத்து நடந்த விவாகரங்களை மையமாக வைத்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் பல்வேறு விஷயங்கள் குறித்து குறிப்பிட்டும் ஸ்டாலின் சாடியிருந்தார். அறிக்கையின் ஒரு பகுதியில் பாமகவையும் விமர்சித்திருந்தார் ஸ்டாலின்.  “குடியுரிமைத் திருத்தச் சட்டம் மக்களவையில் தாக்கல் ஆனபோது அதிமுகவின் ஓர் உறுப்பினர் ஆதரித்து வாக்களித்தார். மாநிலங்களவையில் தாக்கல் ஆனபோது அதிமுகவின் 11 உறுப்பினர்களும், அதிமுக கூட்டணியில் உட்கார சீட் கிடைக்காமல் டயரில் பரிதாபமாகத் தொங்கிக் கொண்டு இருக்கும் பாமகவின் ஓர் உறுப்பினரும் ஆதரித்து வாக்களித்தார்கள்.


ஈழத்தமிழர்கள் குடியுரிமை பெற வேண்டி திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா கொடுத்த திருத்தத்தை எதிர்த்து வாக்களித்து அந்தத் திருத்தத்தை தோற்கடித்த தமிழினத் துரோகிகள்தான் இவர்கள். இது மட்டுமல்ல, இந்தக் குடியுரிமைத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக, டாக்டர் சத்யகோபால் சிங் தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் விவாதிக்கப்பட்டது. அதில் அதிமுகவின் முன்னாள் எம்.பி. டாக்டர் பி. வேணுகோபால் உறுப்பினராக இருந்தார். பத்துக்கும் மேற்பட்ட மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அக்குழுவில் தங்களது அதிருப்தி கருத்தினைக் கொடுத்தார்கள். அதில் எந்த எதிர்ப்புக் கருத்தையும் சொல்லாமல், கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்து கையெழுத்துப் போட்ட கட்சி அ.தி.மு.க தான். அக்குழு 4.1.2019 அன்று அளித்த அறிக்கையில், எந்த அதிருப்திக் கருத்தையும் அதிமுக உறுப்பினர் சொல்லவில்லை.
இந்த லட்சணத்தில்தான், ஈழத்தமிழர்க்கு குடியுரிமை வழங்க நாங்கள் போராடிக் கொண்டு இருக்கிறோம் என்று பீற்றிக் கொள்கிறார் முதல்வர். இப்படி ஈழத்தமிழர்க்கு துரோகம் இழைத்த அரசு தான், அகதி முகாமுக்குச் சென்று கருத்தறிய முயற்சித்த ‘ஜூனியர் விகடன்’ பத்திரிக்கையாளர்கள் இருவர் மீது வழக்கு போட்டுள்ளது.இது ஒருவிதமான பாசிசத் தன்மையுடன் ஆட்சியை நடத்த முயற்சிப்பதன் அடையாளம். மத்திய பா.ஜ.க அரசு, தனக்கு பெரும்பான்மை இருக்கிறது என்ற ஒரே தகுதியுடன்தான், நினைப்பது அத்தனையையும் நிறைவேற்றத் துடிக்கிறது. பொருளாதாரம், வேலைவாய்ப்பு, வேளாண்மை, சுகாதாரம், கல்வி ஆகியவை பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் காஷ்மீர், அயோத்தி, முத்தலாக், குடியுரிமை, தேசிய குடிமக்கள் பதிவேடு என்று மதவாதச் சித்தாந்தத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது. ஒருவிதமான கலாச்சாரத் தாக்குதல் மூலமாக மக்களைத் தொடர்ந்து பதற்றத்திலேயே வைத்திருக்க மத்திய அரசு நினைக்கிறது.


இது அல்ல, உண்மையான, நேர்மையான அரசியல். மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதும், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதும், அதன் மூலமாக மக்கள் மனங்களை வெல்வதும்தான் உண்மையான வெற்றி; நிலைக்கும் வெற்றி. அதை உணராமல் அச்சுறுத்தலின் மூலமாக மத்திய, மாநில அரசுகளும் அதன் அரசியல் சக்திகளும் செயல்படுவார்களேயானால், மக்கள் மன்றத்தில் அவர்கள் வெகுசீக்கிரத்தில் அந்நியப்பட்டுப் போவார்கள் என்று எச்சரிக்கிறேன். எனவே குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடி வரும் அனைவர் மீதும் போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!” என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.