பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளைக் கொண்டாட அதிமுக அரசுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜ கண்ணப்பன் திமுகவில் இணைந்த விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “தமிழகத்தின் நிதி நிலைமை கோமா நிலையில் உள்ளது. திமுக 2011-ல் ஆட்சியை விட்டு சென்றபோது ரூ.1 லட்சம் கோடியாக இருந்த தமிழக அரசின் கடன், கடந்த 3 ஆண்டில் அதிமுக ஆட்சியில் ரூ.4.65 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.


ஜெயலலிதா ஆட்சியில் இருந்ததைவிட எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில்தான் கடன் தொகை மிகவும் அதிகரித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் கவலை தருவதாக உள்ளது. ஆளுங்கட்சியினர் வைத்த பேனர் விழுந்து சென்னையில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் இறந்தார். கோவையில் அனுராதா காயமடைந்தார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்தவண்ணம் உள்ளன. இந்தச் சூழலில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளைக் கொண்டாட அதிமுக அரசுக்கு என்ன தகுதி இருக்கிறது?

 
தமிழகத்தில் எத்தனை நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன? அந்த நிறுவனங்களின் பட்டியலை வெளியிட அரசு தயாரா? தமிழகத்தின் வளர்ச்சி வீதம் 7.27 சதவீதமாகக் குறைந்துவிட்டது. தன்னை விவசாயி என்று  அழைத்துக்கொள்ளும் முதல்வரின் விரல் நகத்தில் மண் இல்லை. அவர் கையில் ஊழல் கறைதான் உள்ளது.  திமுக ஆட்சிக்கு வந்ததும் பொள்ளாட்சி விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுப்போம்” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.