‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலம் தினமும் லட்சம் பேருக்கு உணவளிப்போம் என்று திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மே 3-ம் தேதிக்கு பிறகு மீண்டும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் திமுக ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி அறிவிக்கப்பட்டுள்ள எண்ணுக்கு அழைப்போருக்கு உணவு பொருட்கள் வழங்கப்படும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


இந்நிலையில் இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் பசியைப் போக்க நாம் தொடங்கியுள்ள ‘ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டத்தின் மூலம் உணவுப் பொருட்கள் அளித்தாலும், சமைத்துச் சாப்பிடக்கூட இடமில்லை எனச் சிலர் சொன்ன செய்தியைக் கேட்டு எனது இதயம் நொறுங்கிவிட்டது. ‘தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அளித்திடுவோம்’ என பாரதியார் பாடினார். தனி ஒரு மனிதனும் பசியால் வாடக் கூடாது என்பதற்காக ‘ஏழைகளுக்கு உணவளிப்போம்’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளோம்.
இத்திட்டத்தின் மூலம் தினமும் லட்சம் பேருக்கு உணவளிப்போம். பட்டினி இல்லாத சூழலை நாம் உருவாக்குவோம். இதற்காக 25 முக்கிய நகரங்களில் சமையல்கூடங்களை அமைத்து உணவுகளை வழங்கப்போகிறோம். பேரிடர் காலத்தில் உணவின்றித் தவிப்போருக்குக் கொண்டுபோய் சேர்ப்போம். பசியில்லா சமூகத்தை உருவாக்க அனைவரும் உறுதியேற்போம்! ஒன்றிணைவோம்! உணவளிப்போம்! உதவிகள் செய்வோம்!” என்று அதில் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.