மூன்று எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்தால் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபாலை அதிமுக சட்டப்பேரவை கொறடா ராஜேந்திரன் இன்று சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். 
இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கொறடா ராஜேந்திரன், “அதிமுகவுக்கு எதிராக கட்சி விரோத செயல்களில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி ஆகியோர் ஈடுபட்டுவருகிறார்கள். அதிமுக எம்.எல்.ஏ.க்களாக இருந்துகொண்டு தினகரன் அணியில் பதவியில் இருக்கிறார்கள். அவர்கள் மூவர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி பேரவைத் தலைவரிடம் மனு அளித்துள்ளேன். அதற்கு ஆதாரமாக டிடிவி தினகரனோடு இருக்கும் 3 எம்.எல்.ஏ.க்களின் புகைப்பட ஆதாரங்களையும் கொடுத்துள்ளேன்.” என்று தெரிவித்தார்.
இதன்மூலம் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள மூன்று எம்.எல்.ஏ.க்களின் பதவியைப் பறிக்க அதிமுக முடிவு செய்துவிட்டதாக அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
 “நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவர உள்ள நிலையில் 3 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுப்பது கண்டனத்துக்கு உரியது. 3 எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுத்தால், அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வருவோம். ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற பீதியில் உள்ள அதிமுக அரசு, இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக கருதுகிறேன்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியை எப்படியும் தக்க வைப்பது என பிரதமரும், ஆளுநரும் செயல்படுகிறார்கள். கட்சி சார்பற்ற முறையில் செயல்பட வேண்டிய சபாநாயகரின் நடவடிக்கை பாரபட்சமற்ற முறையில் இருக்க வேண்டும்.  கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் 3 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என சபாநாயகரை வலியுறுத்துகிறேன்” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.